பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நினைவு அலைகள் தொலைதூரத்தில் உள்ள அலகாபாத் நகரில் பண்டித ஜவகர்லால் நேரு கைது செய்யப்பட்டார்? என்ன குற்றத்திற்காக? சைமன் குழுவை எதிர்க்கும் இந்தியர்களின் ஊர்வலமொன்றைத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார். சைமன் குழுவைப் பற்றிச் சில சொற்கள். ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைத்திந்திய காங்கிரசு தோன்றியது. அரசின் பெரும் பதவிகளில் இந்தியருக்கும் இடம் வேண்டுமென்று கேட்டுக் கொண்டு முளைத்த அவ்வியக்கம் வளர்ந்தது. தன்னாட்சி உரிமை கேட்கும் இயக்கமாக வளர்ந்தது. உரிமைக்குரலில் சூடேறிற்று. அவ்வேளை அண்ணல் காந்தியார் காங்கிரசில் சேர்ந்தார். இயக்கம் அவருடைய தலைமையில் நடந்தது. நெடுநாள், படித்த சிலருடைய இயக்கமாக இருந்த காங்கிரசு, காந்தியடிகளாரின் தலைமையில் பொதுமக்கள் இயக்கமாக மாறிற்று. உரிமைக்குரல் கணிரென்று ஒலித்தது. எல்லாப் பக்கங்களிலும் ஒலித்தது. அலட்சியப்படுத்தும் நிலையைத் தாண்டி விட்டதை ஆங்கிலேய ஆட்சியுணர்ந்தது. இந்தியர்களுக்கு எந்த அளவு அரசியல் உரிமை கொடுக்கலாம் என்று பலரையும் விசாரித்தறிய, சைமன் பிரபு என்பவரின் தலைமையில் குழு ஒன்றை ஆங்கில அரசு நியமித்தது. காந்தியடிகள், எதிர்ப்புச்சூறாவளியைக் கிளப்பினார். 'இந்தியர்களின் அரசியல் உரிமையைப் பறித்தது அநீதி; அதைத் திருப்பித் தரலாமா என்று முழுக்க முழுக்க ஆங்கிலேயரைக் கொண்டு விசாரிப்பது இந்தியர்களுக்கு மிகப்பெரிய அவமானம். 'எனவே சைமன் குழுவோடு ஒத்துழைக்காதீர்கள். நாட்டு மக்களின் வெறுப்பை வெளிக்காட்டுங்கள்' என்று காந்தி அடிகள் கட்டளை யிட்டார். இக்கட்டளைக்கேற்ப சைமன் குழு, அலகாபாத்திற்குச் சென்ற வேளை, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடையாளமான எதிர்ப்பு ஊர்வலத்தை, பண்டித ஜவகர்லால் நேரு நடத்தினார். அதற்காகக் கைதானார். அச்செய்தி சென்னைக்கு எட்டிற்று. ஆண்கள் கலைக் கல்லூரிகள் மூன்று. மாநிலக் கல்லூரி இப்போதுள்ள இடத்திலேயே இருந்தது. கிறுத்துவக் கல்லூரி, உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் இருந்தது. பிறகே தர்ம்பரத்திற்குக் குடிசென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/310&oldid=787146" இலிருந்து மீள்விக்கப்பட்டது