பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நினைவு அலைகள் இன்றையக் கல்விக்கூடங்கள், பொதுக்கூடங்கள்; எல்லாச் சாதியாரும் கலந்து படிக்கும் இடங்களாகும். இம்மாற்றத்திற்காக, தன்மான இயக்கத் தந்தை பெரியாரும் அவ்வியக்கத் தொண்டர்களும் கேட்ட ஏச்சும் பேச்சும் கொஞ்சமல்ல. அன்று அவர்கள் பெற்ற ஆதரவு தினையளவு: சமாளித்த எதிர்ப்புகள் மலையளவாகும. 36. மாநாட்டின் புரட்சிகரமான தீர்மானங்கள் புரட்சிகரத் தீர்மானங்கள் செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாடு தமிழ்நாட்டுச் சிந்தனைப் போக்கில், குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. மெய்யான பொதுமக்களின் பிரதிநிதிகள், பத்தாயிரம் பேர்கள் கூடி, சில முடிவுகளை மேற்கொண்டார்கள். அம்முடிவுகளைச் செயல்படுத்தியிருந்தால், தமிழ்ச் சமுதாயம் எவ்வளவோ முன்னேறியிருக்கும். குழந்தை மன எதிர்ப்பு - ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நமது நாட்டில் திருமணத்திற்கு, உற்ற வயது என்பதே கிடையாது. கூவத் தெரியாத குயில் குஞ்சுகள் போன்ற சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் திருமணஞ் செய்து வைத்துவிடுவார்கள் பெற்றோர் மடிகளில் உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்குத் திருமணம் என்பது சொல்லொ னாக் கொடுமை. இக்கொடுமையை எதிர்த்துத், தென்னகத்தில், தன்மான இயக்கம் முதல் குரல் எழுப்பிற்று. இக்கொடிய பழக்கத்தை எதிர்த்து பெரியார் ஈ.வெ.ரா.வும் அவருடைய இயக்கத்தவர்களும் எண்ணற்ற மேடைகளில் முழங்கினார்கள். பழமை விரும்பிகளின் கண்மூடித்தனமான பேச்சுக்கு ஆளானார்கள். சமுதாயத்தில் எதிர்நீச்சல் போடத் துணிந்த சுயமரியாதை மாநாடு, 'பெண்களின் கலியான வயது 16 க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி புருஷன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்துவாழ இஷடமில்லாதபோது தம்முடைய கலியான ஒப்பந்தத்தை ரத்து செய்துகொண்டு பிரிந்துபோக உரிமையிருக்க வேண்டும் என்றும்' இம்மாநாடு முடிவு செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/332&oldid=787170" இலிருந்து மீள்விக்கப்பட்டது