பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. இந்திய விடுதலைப் போராட்டத்தில் என் பங்கு ஒரிரவு முழுவதும் தூங்காமல் குழம்பிய பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன். என்ன முடிவு? சோப்பையும் சீப்பையும் விற்றுப்பிழைக்க வந்த அன்னியர், இந்தியாவை ஆள்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது தவறு: மிகப்பெரிய தவறு. 'இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபடுவது எல்லோருடைய கடமையுமாகும். எம்முறையில் பாடுபடுவது? பலவகைகளில் உதவலாம். போருக்குப் பலவகையினருடைய உதவி தேவை, அதைப் போல, இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பலவகையினருக்கும் பங்கு உண்டு. போராட்ட களத்தில் நிற்பதற்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் தேவை. அவர்களுக்குப் பின்னணியாகப் பல தொண்டுகளைச் செய்யும் தொண்டர்கள் தேவை. 'விழுப்புண் ஏற்கக் களத்தில் நிற்காத, விளம்பரம் பெறாத உழவரும், பண்டங்களை ஏற்றிச் செல்வோரும் போரின் வெற்றிக்குத் துணை நிற்கிறார்கள். அவர்களுடைய மெய்த்தொண்டும் ஆர்வமும் ஆதரவும் போரின் வெற்றிக்கான சூழலை உருவாக்குகின்றன. நான், அணில்போல தொண்டாற்றுவதென்று முடிவு செய்தேன். ‘விடுதலைப் போராட்டம் தலைசாய்ந்த கதிர்களை விரைந்து அறுத்துக் களத்துமேட்டில் சேர்க்கும் பணியல்ல. மாறாக, காடு வெட்டி, கழனியாக்கி, உழுது, புதுப்பயிர் இடுவது போன்று அரும்பாடு கொள்வது. இது பல்லாண்டுகளுக்குப் பிறகே பலன் கொடுக்கும். இதற்கு முன்னணி தேவைப்படுவதுபோல், நீண்ட தொடர் அணியும் பின்னணியும் தேவை. நேரடியாகப் போராட்டத்தில் குதிக்கும் உந்துதலைப் பெறாத நானும் என்னாலான நாட்டுத் தொண்டைப் புரிய உறுதிபூண்டேன். 'ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் எதிர்ப்பைத் தள்ளிவிடலாமா? அரசியல் விடுதலை ஆள்வோர் மாற்றத்தோடு நின்று விடக் கூடாது. அது நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும்: கடையரும் கடைத்தேற வழி செய்ய வேண்டும். 'சமுதாய நீதிக்கும் எல்லார்க்கும் வாழ்வளிப்பதற்கும் பயன்படாத அரசியல் விடுதலை கன்று ஈன முடியாத மலட்டுப் பசுவிற்கு ஒப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/344&oldid=787183" இலிருந்து மீள்விக்கப்பட்டது