பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 நினைவு அலைகள் தன்மான இயக்கத் தந்தை பெரியாரின் முதல் தளபதியாகிவிட்ட திரு. குருசாமிக்கு, பெரியார் முன்னின்று திருமண ஏற்பாட்டைச்செய்து முடித்து வைத்தார். திரு. குருசாமி கலப்புத் திருமணந்தான் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார். சுயமரியாதை இயக்கத்தின் முதல் கலப்புத் திருமணம் திருவாரூர் சுப்பிரமணியம் என்பவர், சென்னையில் பிடில் ஆசிரியராக வாழ்ந்து வந்தார். பெரிய வித்வான்களுக்குப் பிடில் வாசித்து வந்த அவர், மரபுப்படி வைதீகர். வாழ்க்கை முறையிலே முற்போக்காளர். அவர், டாக்டர் யூ. ராமராவ், அவருடைய மகன் டாக்டர் யூ. கிருஷ்ணராவ் - இவர் பிற்காலத்தில் சென்னை மேயராகவும், அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் விளங்கியவர் - பம்மல் சம்பந்த முதலியார் ஆகிய பெரியோர்களுக்குக் குடும்ப நண்பர். படித்தோர் உறவு, திரு. சுப்பிரமணியத்திற்குப் படிப்பில் ஆர்வம் ஊட்டியது. தாய்மொழி தமிழோடு தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். அவருடைய உருது உச்சரிப்பை உருதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பாராட்டியதை நான் பலமுறை கேட்டு வியந்துள்ளேன். திரு. சுப்பிரமணியத்திற்கு முதலில் மூன்று பெண்களும் கடைசியாக ஒரு மகனும் பிறந்தார். அவர், அறுபது ஆண்டுகளுக்கு முன்பே தன்மான இயக்கம் ஊசிபோட்டு ஊக்குவிப்பதற்கு முன்பே, தன்னுடைய பெண்களையும் பட்டப் படிப்பில் படிக்க வைத்தார். * மூத்த மகள் செல்வி குஞ்சிதம் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் கடைசி ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது பெரியாரும் சில தோழர்களும், பெண் பார்க்க வந்தார்கள். திரு. சுப்பிரமணியம் வீட்டில் இருந்த வைதீகச் சூழலைக் கண்டவர்கள், இது கூடிவராது' என்றும் நினைத்தார்களாம். பெரியார் மலைக்கவில்லை; திரு. குருசாமியின் மனம் மாற்றும் ஆற்றலைப் பற்றியும் அவநம்பிக்கை கொள்ளவில்லை. எனவே குஞ்சிதம்-குருசாமி திருமணத்தை ஏற்பாடு செய்தார். புரோகிதமில்லாத சீர்திருத்தத்திற்குப் பெண் வீட்டாரை இணங்க வைத்தார். திருமணம், பெரியார் பொறுப்பில், ஈரோட்டில் வெகு சிறப்பாக நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/356&oldid=787196" இலிருந்து மீள்விக்கப்பட்டது