பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவு அலைகள் கதறினார். ஒராண்டில் தமிழ் மக்கள் எல்லார்க்கும் எழுத்தறிவு கொடுக்கச் சொல்லி இரங்கி வேண்டினார். நடக்கவில்லை. ஈரோட்டு உணர்வினைப் பெற்றிருந்த பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது ஐந்தாண்டுகளில் எல்லாத் தமிழர்களுக்கும் எழுத்தறிவு புகட்டிவிட உறுதி பூண்டிருந்தார். நாற்றங்கால் விட்டார். பயிர் இடுவதற்கு முன்பு மறைந்தார். எழுத்தறிவு பயிர் ஆகவில்லை. தன்மான இயக்கம், பொதுமக்கள் நலனுக்கான பலவற்றையும் சிந்தித்தது: துணிந்து சொல்லிற்று; செயல்படுத்துவோர் இல்லாமை, இயக்கத்தின் குறையாகி விடுமா? நம் தவறு அல்லவா? 'அடுத்த மக்கள் எண்ணிக்கைக் கணக்கெடுக்கையிலும் பிறப்பு இறப்பு கணக்கிலும் மதம், சாதி, பட்டம் ஆகிய பெயர்களைக் கொடுக்கக்கூடாதென்றும் இளைஞர் மாநாடு கேட்டுக் கொண்டது. அதை மதித்து, பல இலட்சக்கணக்கானவர்கள் - முதியவர்களும் - குடிக்கணக்கின்போது, சமயம், சாதியற்றவர்களாக அறிவித்தார்கள். அதில் அடியேனும் ஒருவன். நல்லதும் கெட்டதும் கலந்ததே சமுதாயம். நல்லதாக முளைப்பது காலநீளத்தில் கெடுதலாக மாறுவதுண்டு. இன்று பகல், புதுச்சோறாக மணம் வீசுவது, மூன்றாம் நாள் பகல், ஊசிப் போன சோறாகவல்லவா நாறும்? அந்நிலையில் அதைக் கொட்டிப் புதைத்துவிடுவது அல்லவா அறிவுடைமை? சாதி வேற்றுமை, அவற்றின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு, பெண் அடிமை ஆகியவை புதைக்கப்பட வேண்டிய தீமைகள்; நம்மிடையே இன்றும் மண்டிக்கிடக்கின்றன. பெண்களுக்குப் பொட்டுக் கட்டும் இழிவு தொலைந்தது இக்கொடுமைகளுக்கெல்லாம் கொடிய பழக்கம் ஒன்று நம் சமுதாயத்தில் பரவி நிலைத்திருந்தது. அப்பழக்கமே அநீதி: சித்திரவதை தீமை; வழிவழித் தீமை; ஆகவே அருவருக்கத்தக்கது. அதைச் சமயத்தோடு இணைக்கும்போது, இரண்டும் தொடக்கூடாதவை, அவ்வளவு தீய பழக்கம் என்ன? நம் சமுதாயத்தில் ஒரு பிரிவினரின் வீடுகளில் பிறக்கும் பெண்களுக்கு யாதும் அறியமுடியாத சிறு பருவத்தே, பொட்டுக்கட்டி' தேவர்க்கு அடியார்களாக விட்டுவிடுவது. அப்பெண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. காசு கொடுத்தவனுக்கெல்லாம் பெண்டாக வேண்டும். வாழ்நாள் முழுவதும் கோயில் தொண்டு செய்வதாகப் பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/372&oldid=787216" இலிருந்து மீள்விக்கப்பட்டது