பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 நினைவு அலைகள் பணக்காரர்களோடு நெருங்கிப் பழகிய போதிலும் அவர்களைக் கண்டு அழுக்காறு கொள்ளவில்லை. அவர்களைப்போல் ஆக வேண்டும் என்னும் அவாவிலும் சிக்கித் தவிக்கவில்லை. 'பிழைக்கத் தெரியாத நாங்களும் வளர்ந்தோம். வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பட்டம் பெற்ற போதிலும் உள்ளம் உடையாமல் இருந்தோம். எங்கோ முளைத்து வளர்ந்து சராசரி மனிதரைக் காட்டிலும் அதிகப்படியான தொண்டாற்றிவிட்டோம். திரு. சின்னசாமி, பட்டம் பெற்றபின் ஆசிரியத் தொழிலில் நாட்டங் கொண்டார். சைன்த, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றார்: எல்.டி. பட்டம் பெற்றார். அக்காலத்தில் பள்ளிகள் குறைவு. அவற்றில் சேரும் பிள்ளைகளும் மிகக்குறைவு. எனவே, புதிய வேலைகள் எங்கோ ஒன்றிரண்டு இருப்பினும் கணக்கில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்ததால், திரு. சின்னசாமிக்கு அன்றைய கோவை மாவட்டக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. உதவி ஆசிரியராக நல்ல பெயர் எடுத்தார். சில ஆண்டுகளில் தகுதியினால் தலைமை ஆசிரியர் ஆனார். தொடக்க காலத்தில் திரு. சின்னசாமி என்புருக்கி நோய்க்கு ஆளானார். மருத்துவம் எங்கே? தாம்பரம் சானிடோரிய மருத்துவமனையில். அங்கே, அவர் அநேக திங்கள் தங்க நேர்ந்தது. அப்போது நான் அங்குச் சென்று, அவரைப் பார்த்துவிட்டு வருவேன். நெடுநேரம் உரையாடுவேன். நான் முதன்முறை அச்சிகிச்சையகத்திற்குச் சென்று வந்ததை அறிந்த அன்பர் ஒருவர், அப்பா, அது (இருமல்) ஒட்டுநோய்; பொல்லாத நோய். நீ அங்குச் சென்று ஒட்டிக்கொண்டு வந்து விடாதே' என்று அச்சுறுத்தினார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பலமுறை சென்று நண்பருடன் உரையாடிவிட்டு வந்துள்ளேன். திரு. சின்னசாமி, உடல் நலிந்திருந்தபோதும், உள்ளம் சிறிதும் தளரவில்லை; வீணாகப் பொருமவில்லை; ஏக்கப் பெருமூச்சு விடவும் இல்லை. நோய்வாய்ப்பட்ட உடல் திரும்ப நலம் பெறுவதற்கு மருத்துவத்துடன் உள்ளத் தெம்பும் துணை. இதை உணர்ந்த நண்பர் சின்னசாமி, மருத்துவ மனையிலும் மனம் குலையாது நம்பிக்கையோடு இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/378&oldid=787222" இலிருந்து மீள்விக்கப்பட்டது