பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நினைவு அலைகள் காடு திருத்தி நாடாக்குவது இன்றியமையாதது. ஆனால் காடே இல்லையெனில் நாடே இராது. நாடு முழுவதும் பாலையாகிவிடும். நாட்டின் எல்லைகளைக் காப்பது எவ்வளவு முன்னுரிமை பெறவேண்டியதோ அவ்வளவு முன்னுரிமை பெறவேண்டியவை, காட்டு வளத்தையும் சூழலையும் காப்பதுமாகும். நெடும் பரப்பு மரங்கள் செறிந்திருந்தால் குளுமை மிகும். மழை பெய்யும்; கொட்டும் மழை நீர் விரைந்தோடிவிடாது; பெருவெள்ள மாகிப் பாழாக்காது. கோடிக்கணக்கான கிளைகள் தாங்கி, வேர்கள் தடுத்து அனுப்புவதால் விரைவு குறையும். ஆனால் உழைப்பவர்களைத் தள்ளி வைத்துப் பாழாகிப் போவதுபோல், வாழ வைக்கும் நடவடிக்கைகளையும் ஒதுக்கி வைத்துக் கெட்டுப்போகிறோம். அக்கால நீலகிரியில் மரங்கள் எந்த அளவிற்குச் செறிந்திருந்தன? ஒரு குன்றின் மீதுள்ள பங்களா வெளியில் நின்றுகொண்டு தொலை வில் உள்ள குன்றைப் பார்த்தால் இடையிலுள்ள பங்களாக்கள் கண்ணில் படா. அவற்றை மறைக்கும் அளவு மரம் செடி கொடிகள் செறிந்திருந்தன. அன்னிய ஆட்சி, பாதுகாத்து நம்மிடம் விட்டுவிட்டுப் போன அக்காடுகளை, சோலைகளை மளமளவென்று வெட்டி அழிப்பதில் வேகமாகப் போட்டியிட்டோம். தன்னாட்சியின் கை கண்ட பலன், பசுமை நிறைந்த நீலகிரி மொட்டை மலையாக மாறியதே. பொறுப்பில்லாமல் போட்டி போட்டு மரங்களை வெட்டி வீழ்த்தியதன் கொடிய விளைவை 1978ஆம் ஆண்டின் இறுதியில் கண்டோம். நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. மிச்சமுள்ள நீலகிரியின் இயற்கை வளங்களையாவது காப்பாற்றக் கற்றுக் கொண்டால் நல்லது. கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி ஆகிய மலைகளின் மரவளத் தையும் அழிக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். உதகையில் நாலு நாள்கள் இயற்கையின் எழில் கொஞ்சும் நீலகிரியில், மூன்று சக்கர இரயிலில் மெல்லப் பயணம் செய்தேன். எங்கே இறங்குவது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஈரோடு, கோவை நகரங்களுக்குச் சென்றுவிட்டு உதகைக்குப் போனதால், திரு. தணிகைவேலுக்கு முன்கூட்டித் தகவல் கொடுக்க இயலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/384&oldid=787229" இலிருந்து மீள்விக்கப்பட்டது