பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. மேல் பட்டப்படிப்பு தொடர்ந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன் இண்டர்மீடியட் தேர்வு முடிவுகள் வெளியாயின. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். மட்டற்ற மகிழ்ச்சி. மதிப்பெண்கள் வந்தபோது மேலும் மகிழ்ச்சி. ஏன்? கணக்கிலும் பெளதிகத்திலும் அக்காலநிலைக்குத் தாராளமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். ஏற்கெனவே பொறியியற் கல்லூரியில் சேர்வதில்லை என்ற என் முடிவை என் தந்தை ஏற்றுக் கொண்டிருந்தார். அப்படியானால் எதில் சேருவது? கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியவர்கள் இருந்தார்கள். அத்தனை பேர்களையும் பி. ஏ. கணக்குச் சிறப்பில் சேர்க்கப் போதுமான இடங்களில்லை. ஆகவே அதற்கு முயல்வதில் பயனில்லை. பெளதிகத்தில் இடம் குறைவே. மாநிலக் கல்லூரியில் ஆறே இடம். முதல் ஆறில் என் மதிப்பெண் இருக்குமா என்பது கேள்விக்குறி. ஆயினும் மதிப்பெண் பெற்ற சிலர் பொறியியல் படிக்கச் சென்றுவிடக்கூடும். அப்படியானால் எனக்கு இடம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம். இந்த அடிப்படையில் பெளதிகம் (சிறப்புப்) பாடத்திற்கும் பொருளியல் (சிறப்புப்) பாடத்திற்கும் மனுச்செய்தேன். நான் அதே கல்லூரி மாணவன்; முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவன். எனவே எனக்கு முன் உரிமை இருக்குமென்று கருதினேன். அந்த நம்பிக்கையாலும் பாட்டியை இழந்த துக்கத்திலிருந்து மீளமுடியாமையாலும் கல்லூரியில் இடம் வாங்கச் சென்னைக்குச் செல்லவில்லை. ஊரோடு இருந்து, வழிமேல் விழிவைத்து அஞ்சலுக்காகக் காத்து இருந்தேன். நான் எதிர்பார்த்தது வரவில்லை. நண்பர் தி. அ.இராமகிருஷ்ண னிடம் இருந்து கடிதம் வந்தது. அதில் செய்தியும் இருந்தது. என்ன செய்தி , பி.ஏ. பொருளியல் சிறப்பு வகுப்பில் அவர் சேர்க்கப்பட்டு விட்டார். சில நாள்களுக்கு முன்பு தகவல் வந்ததாம். உடனே சம்பளத்தைக் கட்டிக் கல்லூரியில் சேர்ந்து விட்டாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/387&oldid=787233" இலிருந்து மீள்விக்கப்பட்டது