பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நினைவு அலைகள் இதுவும் குணப்படுத்தாவிட்டால், 'சி' கலவை கொடுத்துப் பார்க்கிறேன். நீ கவலைப்படாதே! விரைவில் குணமாகிவிடும்' என்று டாக்டர் நாராயணசாமி தேற்றினார். மூன்று கலவை மருந்துகளையும் சாப்பிட்டுப் பார்த்தாயிற்று. காய்ச்சல் குறைந்தபாடில்லை. உடம்பு இளைத்து விட்டது; படிப்புப் போய்விட்டது. ஊரிலிருந்து என் தந்தையும் மாமாவும் வந்துசேர்ந்தார்கள். விடுதி மருத்துவரால் இன்ன காய்ச்சல் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே என்று வருந்தினார்கள். எனக்கு வீட்டு நினைப்பு வந்துவிட்டது. 'நல்லது. நாட்டு மருந்து கேட்கக்கூடும். இளையனார் வேலூரில் சித்த மருத்துவர், நடேசர் இருக்கிறார். அவரிடம் மருந்து சாப்பிடலாம். விடுதியில் வேளா வேளைக்குப் பத்திய உணவு கொடுப்பதும் கடினம்’ என்று கூறி என்னை நெய்யாடுபாக்கத்திற்கு அழைத்துச் சென்றார்கள். நாட்டு வைத்தியம் நாட்டு மருந்து சாப்பிட்டேன். இரண்டு மூன்று நாள்களில் காய்ச்சல் ஒரளவு தணிந்தது; ஆனால் முழுவதும் தணியவில்லை. சில நாள்களில் மீண்டும் கொதிக்கும் காய்ச்சல். காஞ்சிபுரத்திலிருந்து நாட்டு மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார்கள். அவர் மருந்தும் குணப்படுத்தவில்லை. பத்து நாள்கள் கழிந்தன. 'சென்னையில் டாக்டர் குருசாமி முதலியார் என்னும் மருத்துவ மேதை இருக்கிறார், அவரிடம் காட்டுங்கள். எமன் வாயில் போன உயிரைக்கூட மீட்டுவிடக்கூடிய திறமை உடையவர் அவர், ' என்று யாரோ, என் தந்தைக்கு ஆலோசனை கூறினார்களாம். அதை என்னிடம் தெரிவித்தார். விடுதியில் நோயால் துன்பப்பட்டபோது, வீட்டை நாடிற்று என் மனம். வீட்டுக் கவனிப்பு பத்து நாள்களில் திகட்டிவிட்டது. எப்படியாவது குணம் பெறத் துடித்தது உள்ளம். எனவே, டாக்டர் குருசாமியிடம் காட்டி மருந்து சாப்பிட உடன்பட்டேன். சென்னையிலுள்ள நண்பர் திரு. ப. ச. கைலாசத்துக்குக் கடிதம் எழுதினேன். நான் சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேரும் நாளையும் நேரத்தையும் அறிவித்தேன். அங்கிருந்து நேரே டாக்டர் குருசாமி வீட்டுக்குப் போக விரும்புவதால், அவர் காரை புகைவண்டி நிலையத்துக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/400&oldid=787263" இலிருந்து மீள்விக்கப்பட்டது