பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 நினைவு அலைகள் 'திரு அபிபுல்லா, இளகிய மனத்தினர்; நட்புக்கு இனியவர்: உதவும் பண்பினர். எனவே எப்படியும் உயர்படிப்பிற்கு ஏற்ற வேலையைப் போட்டுக் கொடுப்பார் என்று திரு மாணிக்கம் உறுதியாக நம்பினார். எனவே, பயணத் திட்டம் போட்டோம். அவரும் நானும் சென்னையில் சந்தித்து, அங்கிருந்து திருவனந்தபுரம் செல்ல முடிவு செய்தோம். நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் பயணம் தடையானது. ஏன்? நாங்கள் திருவனந்தபுரத்தில் இருக்கத் திட்டமிட்ட நாள்களில், திவான் அபிபுல்லா, தில்லியில் இருப்பார் என்று என் உறவினர் மாணிக்கத்திற்குத் தக்கவர் மூலம் செய்தி எட்டிற்று. எனவே பயணத்தைத் தள்ளிப்போடச் சொல்லி, வேலூரில் இருந்து செய்தி அனுப்பினார். தள்ளப்பட்ட பயணம் நடந்ததா? நடக்கவே இல்லை. ஏறத்தாழ இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே நான் திருவனந்தபுரத்தில் கால் எடுத்து வைக்க நேர்ந்தது. அவ்வளவு காலம் கழித்து வேலை தேடிப் போனேனா? இல்லை! நாடு தேடிப்போனேன். நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டபோது, நான் சென்னை மாநிலத்தில் பொதுக்கல்வி இயக்குநர் பதவியில் இருந்தேன். இணைப்புக்கு முன்பு நாஞ்சில் நாட்டுக் கல்வி நிலையங்கள் நிலை, அவற்றிற்கு அரசு கொடுக்கும் உதவி, அங்குள்ளோர் பற்றிய ஊழிய விதி முறைகள், ஆகிய பல தகவல்களை, நேரில் திரட்டி வருமாறு சென்னை அரசு எனக்கு ஆணையிட்டது. அதற்குக் கீழ்ப்படிந்து, அங்குச் சென்றேன். அப்பொழுது, வேலைதேடி, திரு மாணிக்க முதலியார் தயவில் வர இருந்தது, அது தவறிப்போனது முதலியன என் நினைவில் மின்னின. திவானைக் காணத் திட்டமிட்டது பலிக்காவிட்டாலும் திருவாங்கூர் மன்னரையே அம்முதல் பயணத்தின்போது காண நேர்ந்தது பூரிப்பை ஊட்டியது. களாக்காய் கிடைக்காதவனுக்குப் பலாப்பழம் கிடைத்தாற் போல் இருந்தது. ஆனால் அதுவரை எவ்வளவு பேரால் பொறுமையாகத் தாங்கிக் கொண்டு இருக்கமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/432&oldid=787328" இலிருந்து மீள்விக்கப்பட்டது