பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 நினைவு அலைகள் அத்திட்டத்தைப் பொதுமக்களிடம் பரப்புவதென்றும், மாநில மாநாட்டைக் கூட்டி அதில் திட்டத்தை நிறைவேற்றுவதென்றும் முடிவுசெய்யப்பட்டது. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித்தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வதே இலட்சியமென்று அத்திட்டம் அறிவித்தது. எல்லாத் தொழிற் சாலைகளையும், இரயில் வேக்களையும், வங்கிகளையும், கப்பல், படகு, நீர்வழி, போக்குவரத்துச் சாதனங்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது. எல்லா விவசாய நிலங்களையும் காடுகளையும் மற்றத் தாவர சொத்துகளையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது என்பவை திட்டங்களாகும். இவற்றை நடைமுறைப்படுத்த ஆட்சி வேண்டுமே! அது எத்தகையதாக இருக்க வேண்டும்? சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளையெல்லாம் மாற்றி, இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக் காரர்கள், என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது சுயமரியாதைச் சமதர்மத் திட்டமாகும். தமிழ்நாட்டில் புதிய எழுச்சி மேற்படி திட்டம், தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களிடையே புதியதொரு பார்வையை உருவாக்கியது. சுயமரியாதை இயக்க மேடைகளிலும் மாநாடுகளிலும் சாதி ஒழிப்பு முழக்கத்தோடு, எல்லோரும் ஒர் நிறை என்னும் சமத்துவக் குரலோடு, சமதர்மக் கோட்பாடும் முரசொலிக்கப்பட்டது. வேலை இல்லாத் திண்டாட்டத்தில் தத்தளித்த என் போன்ற இளைஞர்கள், சமதர்மக் கோட்பாட்டினை வெறும் அறிவு பூர்வமான மாற்றுக் கருத்தாக மட்டும் கொள்ளாமல், உணர்வு பூர்வமாக வாழ்க்கை முறையாக, ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டார்கள். அக்கால கட்டத்தில், எங்கள் எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது. இந்தியாதன்னாட்சி பெறும் நிலையிலேயே, சாதி முறையையும், ஏழை செல்வர் முறையையும் வேரோடு கல்லி எறிந்துவிடுவோம் என்று நம்பினோம். அன்று நம்மை ஆண்ட ஆங்கில ஆட்சி, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு மீரத் சதி வழக்கு என்ற பெயரில் பெரிய வழக்கு ஒன்றைத் தொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/445&oldid=787344" இலிருந்து மீள்விக்கப்பட்டது