பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 நினைவு அலைகள் தமிழாக்கம் செய்யும் பணியை உங்களுக்கு ஒதுக்குவேன்' என்று சொன்னார். தேடாமற் பெற்ற அவ் வாய்ப்பினை இழக்க மனம் வரவில்லை. எனவே, ஒப்புக்கொண்டேன். ஊருக்குச் சென்று துணிமணிகளைக் கொண்டு வந்துவிட்டு, வேலையில் சேர்ந்து விடுவதாகச் சொல்லி, விடைபெற்றுக் கொண்டேன். திரு கல்யாணசுந்தரமும் நானும் பேருந்தில் காஞ்சிபுரம் சென்றோம். அங்கிருந்து ஊர்போய்ச் சேர்ந்தேன். என் தந்தையிடம், வழியில் வலிய வந்த தமிழ்நாடு ' துணையாசிரியர் பதவியைப் பற்றிக் கூறினேன். அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எவ்வளவு சம்பளம் கொடுப்பார்களென்று கேட்டார். அதைப் பற்றிக் கேட்கவில்லை யென்று சொன்னேன். 'சம்பளம் கட்டையாகத்தான் இருக்கும். உனக்குப் பொழுதுபோக வேண்டும். இப்போதைக்கு அதை ஏற்றுக் கொள்; சென்னையில் நாள் இதழ் அலுவலகத்தில் வேலை செய்வது, எல்லா விளம்பரங்களையும் காணும் வாய்ப்பைக் கொடுக்கும். கூடிய விரைவில் வேறு நல்ல வேலையாகப் பார்த்துக் கொள்' என்று அறிவுரை கூறினார். நான், 1934 டிசம்பர் 21ஆம் நாள், தமிழ்நாடு இதழின் துணை ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போதும் நான் சம்பளத்தைப் பற்றிப் பேசவில்லை. அவர்களும் சொல்லவில்லை. மாதம் முப்பத்தைந்து ரூபாய் சம்பளம் ஆசிரியர் குழுவில் நான் ஒருவனே பட்டதாரி, கற்றுக்குட்டியாகிய என்னை உடன் வேலை செய்தவர்கள், பொறாமைக் கண்ணோடே பார்த்தார்கள். நான் அதைப் பொருட்படுத்தவில்லை; மூத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கத் தவறவில்லை. டிசம்பர் முப்பதாம் நாள் டாக்டர் வரதராசுலு என்னை அழைத்தார். 'உங்கள் வேலை நன்றாக இருக்கிறது. ஆகவே சனவரி முதல் சம்பளம் போட்டுத்தர முடிவு செய்திருக்கிறேன். இப்போதுள்ள நிலையில் தங்கள் தகுதிக்கேற்ற சம்பளம் கொடுக்க இயலாது. 'தினமணி நமக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டுள்ளது. அது நம் விற்பனையைப் பாதித்துள்ளது. மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; பிறகு பார்க்கலாம்' என்றார். என்ன சொல்லுவதென்றே எனக்குப்புரியவில்லை. படிக்கும்போது திங்கள் தோறும் எழுபத்தைந்து ரூபாய் செலவிட்டோம்: இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/463&oldid=787364" இலிருந்து மீள்விக்கப்பட்டது