பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 நினைவு அலைகள் திரு ஜெயராமுக்குப் பதில் வேறொரு தலைவரைத் தேர்ந்து எடுக்கும் நிலை மூன்றாண்டில் உருவாகிவிட்டது. திரு முத்தய்யா தலைவரானார்; திருவொற்றியூர் சண்முகம் துணைத் தலைவர் ஆனார். முந்தியவர், சுயேச்சை உறுப்பினர். பிந்தியவர், தன் மான இயக்கத்தில் இம்மாவட்ட முன்னோடி. காங்கிரசு இருவருக்கும் ஆதரவு தந்தது. நீதிக்கட்சியின் சார்பில் ஆணையிடும் ஒருமித்த தலைமையில்லை. எனவே, அந்தப் பாரம்பரியத்தில் வந்த திரு சண்முகத்திற்கு என் மாமா துணையானார். அவர் கூட்டைச் சேர்ந்த திரு முத்தய்யாவுக்கும் வாக்களித்தார். புதிய ஆட்சிக்குழு வந்த காலத்தில், ஊராட்சிமன்றங்களை வளர்க்கவேண்டுமென்பதில், சென்னை மாகாண ஆட்சி முனைப்புக் காட்டியது. எனவே, மாவட்டந்தோறும் சில உதவிப் பஞ்சாயத்து அலுவலர்களை நியமித்து, ஊராட்சி மன்றங்களை ஊக்குவிக்குமாறு சுற்றறிக்கை விட்டது. செங்கற் பட்டு மாவட்ட ஆட்சிக்குழு, மூன்று அலுவலர்களை நியமிக்க முடிவு செய்தது. அம்முடிவை, உள்ளாட்சி மன்றங்களின் தலைமை ஆய்வாளர் ஏற்றதும், செயல்படும். மேற்படி முடிவினை எடுத்த கூட்டத்திற்குப் பிறகு, தலைவர் முத்தய்யா, உறுப்பினராகிய திரு. நெ.கோ. சுந்தரசேகரரை வலிய அழைத்தாராம். 'மேற்படி வேலைகளுக்கு நாட்டுப்புற மக்களைத் தெரிந்தவர்கள் வந்தால் நல்லது. உங்கள் மைத்துனர் மகன் ஒருவன் எம்.ஏ. பட்டம் பெற்றுவிட்டுச் சும்மா இருக்கிறானாமே! அவன் இப்போதைக்கு இவ்வேலைக்கு வரட்டும். அவன் வருவது, அப்பணிக்கு நல்லது. 'உங்களை மாவட்டத்தில் பலருக்கும் தெரியும். அதனால், உங்கள் மருமகன், ஊர் ஊராகச் சென்று, ஊராட்சி மன்றங்களை நிறுவ முயன்றால் வெற்றி வாய்ப்பு அதிகமாகலாம். 'முன்பின் தெரியாதவர்களைவிடத் தெரிந்தவர்கள் வருவதே தொடக்க காலத்திற்கு நல்லது. அவனுடைய மனுவை வாங்கிக் கொண்டு வந்து கொடுங்கள். நான் வாக்குறுதி கொடுக்கக்கூடாது. 'இருப்பினும் மூன்று வேலைகளில் ஒன்றை அவனுக்குக் கொடுப்பது கடினமாக இராது' இப்படித்துாபம் போட்டிருக்கிறார். அச்செய்தியை அவர் என்னிடம் கொண்டு வந்தார். என் கைப்பட மனு எழுதிக்கொடுக்கும்படி வற்புறுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/477&oldid=787379" இலிருந்து மீள்விக்கப்பட்டது