பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. உதவிப் பஞ்சாயத்து அலுவலர் ஆனேன் சண்முகனாரின் பரிந்துரை திரு சண்முகம் திரும்பத் திரும்ப எனக்காகப்பேசவும் திரு. வேங்கடசாமியோடு பேசிவிட்டு, முடிவு செய்வதாக, திரு முத்தய்யா கூறினார். திரு சண்முகம் அங்கிருந்தபடியே திரு. வேங்கடசாமியோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். பிந்தியவர் அப்போது பங்களாவில் இல்லையென்று பதில் வந்தது. அடுத்த நாள் காலை வந்து காண்பதாக முன்னறிவிப்புச் செய்தியைக் கூறினார். மறுநாள் மீண்டும் வந்து பார்க்கும் வரை எவ்வித முடிவுக்கும் வரவேண்டாம் என்ற தலைவரைக் கேட்டுக் கொண்டார். பிறகு அவரவர் வீட்டிற்குச் சென்றோம். மறுநாள் திரு சண்முகம் எங்களை அழைத்துக்கொண்டு திரு. வேங்கடசாமி வீட்டிற்குச் சென்றார். நடந்தவற்றை விவரமாக எடுத்துக் கூறினார். மூன்றாவது இடத்தை நிறைவு செய்வதில் காலதாமதம் செய்தால், எந்தப் பெரிய இடத்துப் பரிந்துரையாவது வந்து தட்டிக்கொண்டு போய்விடலாம். ஆகவே அதிகத் தகுதியுடைய சுந்தரவடிவேலுவுக்குக் கொடுப்பதானால், நான் குறுக்கே நிற்கவில்லையென்று, தலைவர் முத்தய்யாவுக்குச் சொல்லச் சொன்னார். திரு. வேங்கடசாமி அதற்கு உடனடியாக இசைந்தார். எல்லோருமாக அருகில் இருந்த, தலைவர் பங்களாவிற்குச் சென்றோம். திரு. வேங்கடசாமி எங்கள் கோரிக்கையை ஆதரித்துப் பேசினார். அப்புறம், எனக்கு வேலை போட்டுத் தருவதாகத் தலைவர் இசைந்தார். ஆணை வந்தது சில நாள்களில், என்னை உதவிப் பஞ்சாயத்து அலுவலராக நியமித்த ஆனை வந்து சேர்ந்தது. என் மாமாவிற்குத் தகவல் கொடுத்தேன். அவரும் என் தந்தையும் சென்னைக்கு வந்தார்கள். மூவருமாகச் சென்று தலைவர், துணைத்தலைவர், வேங்கடசாமி, பக்தவத்சலம் ஆகியோருக்கு நன்றி செலுத்தினோம். பிறகு, சென்னை சைதாப்பேட்டை, பனகல் கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சிக்குழு அலுவலகத்திற்குச் சென்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/485&oldid=787388" இலிருந்து மீள்விக்கப்பட்டது