பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 நினைவு அலைகள் கையாடல் செய்யவில்லை. வங்கிக் கணக்கை முடித்து முழுத் தொகையையும் திருப்பிக் கொடுக்கும்படி, கால தாமதமின்றி மனுப்போட்டு விட்டார். அது அவ்வளவு எளிதான செயலா? அஞ்சலகங்களின் தலைமை அலுவலகத்திற்கு எழுதி, முன்னனுமதி பெற்றே, கணக்கை முடிக்க வேண்டும். பல்லாவரம் அஞ்சல் அதிகாரி உடனுக்குடன் ஆவன செய்து விட்டார். என்றைக்கு ஆணை எதிர்பார்க்கப்படுகிறது என்று, உரியவருக்கு எழுத்து வழி பதில் கொடுத்துவிட்டார். இவை அனைத்தும் நான் வேலையில் சேரும் முன் நடந்தன. நான் அலுவலில் சேர்ந்தபோது கண்டதென்ன? அஞ்சலக அதிகாரியின் அறிவிப்பை யொட்டி, மூன்று நாள் தள்ளி, என்னை கெளல் பஜாருக்கு வந்து, பணத்தைப் பெற்றுக் கொண்டு போகும்படி, ஊராட்சித் தலைவரின் கடிதம் காத்துக் கொண்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்தபடி, குறிப்பிட்ட நாள், பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் கெளல் பஜார் போய்ச் சேர்ந்தேன். பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து அவ்வூருக்கு - இரண்டு கிலோ மீட்டர் இருக்கும்; நடந்து சென்றேன். தலைவர் பணத்தை வாங்கிவர, பல்லாவரம் சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் வீட்டுத் திண்ணையில் காத்திருந்தேன். பேச்சுத் துணைக்குக் கூட எவரும் கிடைக்கவில்லை. கடைசியாக முன்னாள் தலைவர் வந்து சேர்ந்தார்; வெறுங்கையோடு திரும்பினார். ஏன்? தலைமை அலுவலகத்தில் இருந்து எவ்வித ஆணையும் பல்லாவரம் அஞ்சலகத்திற்கு வந்து சேரவில்லை. எனவே, கணக்கை முடித்துப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இச் செய்தியோடு வந்து சேர்ந்தார். "எப்போது ஆணை வரும் என்று சொல்கிறார்கள்?' என்று கேட்டேன். "அதைக் கேட்டேன்; அஞ்சலக அதிகாரி எனக்கு வேண்டியவராக இருந்தும் சரியான பதில் இல்லை. முதலில், சாதாரணமாக, எதிர்பார்க்கும் தவணைக்கும் ஏழு நாள் தள்ளியே நாள் குறித்திருந்தார். அது பொய்யாகிவிட்டதால், இப்போது, நாள் குறிக்க மறுத்துவிட்டார்' என்று பதிலுரைத்தார். இது புது வகையான சிக்கல். என்ன செய்வது என்று திகைத்தேன்? சில மணித் துளிகளில், முன்னாள் தலைவரே வழி சொன்னார். என்ன வழி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/501&oldid=787407" இலிருந்து மீள்விக்கப்பட்டது