பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= 472 நினைவு அலைகள் 'இருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்பு திண்ணையில் உட்கார்ந்திருந்தார்' என்று கூறிவிட்டுத் தம்வழியே சென்றார். பதினைந்து மணித்துளிகளில் கீரனல்லூரை அடைந்தேன். ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டைக் கேட்டுக்கொண்டு அங்குச் சென்றேன். அவ்வீடு பூட்டிக் கிடந்தது. அவர் எங்கே சென்றுள்ளார், என்று கண்டுபிடிக்க, என்னுடன் துணையாக வந்த கடைநிலை ஊழியர் முயன்றார். நான் திண்ணையின்மேல் காத்துக்கிடந்தேன். பலபேரிடம் வீணாக விசாரித்த பிறகு எவரோ ஒருவர் 'ஊராட்சி மன்றத் தலைவர், காஞ்சிபுரம் சென்றுள்ளார். அந்த அய்யங்காரை நீங்கள் வழியில் கண்டிருக்கலாமே!' என்று கூறினார். ஊழியர் அச்செய்தியை என்னிடம் சொன்னார். காத்திருந்து பயனில்லை, அவர் திரும்பிவர இரண்டு மூன்று நாள்கள் ஆகலாம் என்பது தகவல். ஏமாற்றத்தோடு கீரனல்லூரில் இருந்து காண்டுர் நோக்கிப் புறப்பட்டேன். மழை முற்றிற்று; இருப்பினும் மெல்ல நடந்து, காண்டுரைப் போய்ச் சேர்ந்தேன். காண்டுரில் ஒரு பஞ்சாயத்துப் பள்ளி இருந்தது. அங்குச் சென்றேன். அது பூட்டிக் கிடந்தது. என்னுடன் வந்த ஊழியர் ஊராட்சித் தலைவரைத் தேடிச் சென்றார்; தலைவர் வீட்டிலிருந்த பள்ளிக்கூடச் சாவியைக் கொண்டு வந்தார். பள்ளியைத் திறக்க, உள்ளே சென்று உட்கார்ந்தேன். பள்ளிக்கூடத்தின் ஒரே ஆசிரியர், சில நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஊராட்சி மன்றத் தலைவர், நாட்டுர் சடகோபாச்சாரியரும் ஊரில் இல்லை. இரண்டாவது ஊரிலும் எந்த வேலையும் செய்யாது திரும்பினால் எப்படி இருக்கும்? மேலே இருப்பவர்கள், அப்படி நிகழ்ந்ததை நம்புவார்களா? நான் அவ்வூர்களுக்குப் போகாமலே, பொய்யான பயணக் குறிப்புகள் எழுதியதாக அல்லவா நினைப்பார்கள்? இப்படிக் குழப்பத்தோடு உட்கார்ந்து இருப்பதைக் கண்டார் என் ஊழியர் முருகேசன். என்னைப் பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு, மழையில் மீண்டும் ஊருக்குள் சென்றார். அரை மணிக்குப் பின்பு, ஊராட்சித்துணைத் தலைவரோடு திரும்பி வந்தார். பிந்தியவர், தலைவர் வீட்டிலிருந்து, வரவு செலவுக் கணக்கோடு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/515&oldid=787424" இலிருந்து மீள்விக்கப்பட்டது