பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 473 அக்கணக்கைத் தணிக்கை செய்தேன். வரவு செலவு சிலவே. அவற்றில் தவறு ஏதும் இல்லை. அதை ஏட்டில் பதிந்துவிட்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டேன். அப்போதும் மழைவிடவில்லை. சிறிது நனைந்தபடியே, மதுரமங்கலம் போய்ச் சேர்ந்தேன். என் சங்கடம் அங்கு மாவட்ட ஆணைக்குழுவின் பள்ளியொன்று இருந்தது. அங்கே சென்றேன். அக்காலத்தில், எங்கள் கடமைகளில் ஒன்று, மாவட்ட ஆணைக்குழுவின் தொடக்கப் பள்ளிகளைப் பார்வையிட வேண்டியது. அதைக் கவனிக்கும்படி என்னை விட்டு விட்டு, ஊழியர், ஊராட்சித் தலைவரைத் தேடிச் சென்றார். அவர் பெயர் குமாரசாமித் தேவர் என்பதாகும். அவரும் ஊரில் இல்லை. இச்செய்தி வருவதற்கு முன்பு பள்ளிக்கூடப் பார்வையை முடித்தேன். வருகைப் பட்டியின்படி வந்ததாகக் குறித்துள்ள பலர் பள்ளியில் இல்லை. வருகையைப் பொய்யாகப் பதிவு செய்து உள்ளார் என்று அய்யப்பட இடம் உண்டு. மழை வலுத்திருப்பதால் பல பிள்ளைகள் பிற்பகல் வரவில்லை யென்று தலைமையாசிரியர் விளக்கம் சொன்னார். என் நிலை தர்மசங்கடமானது. அக்காலச் சூழ்நிலையில் தலைமையாசிரியர் விளக்கம் சரியாக இருக்கலாம். நாட்டுப்புறத்துச் சூழலில் வளர்ந்த எனக்கு, பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் ஒழுங்கான படிப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பது தெரியும். அதேபோல் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளச் சிலர் உளமாரப் பொய் வருகை போட்டு, பள்ளிக்கூடம் தொடர்ந்து நடத்த நியாயப்படுத்திக் கொள்வதும் உண்டு. இந்நிலையில் பார்வைக் குறிப்பு நூலில், வகுப்புவாரி வருகைப் பதிவு உண்மையில் இருந்தோர் பற்றிய தகவல்களை எழுதிவிட்டு, அடுத்த பணிக்குக் காத்திருந்தேன். என் ஊழியர், தேவர் வீட்டிலிருந்து ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார். தேவர் வெளியூர் சென்றிருப்பதாகவும், திரும்பிவர மூன்று நாள்கள் ஆகலாம் என்றும் சொன்னார். சில நாள்களுக்கு முன்பு செஸ் பணம் நூறு ரூபாய்கள்போல் வந்ததாகவும் அதைக்கூடப் பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் அவராகவே, பேச்சுவாக்கில் வெளிப்படுத்தி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/516&oldid=787425" இலிருந்து மீள்விக்கப்பட்டது