பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 நினைவு அலைகள் பயணச் செலவு ஆசிரியர் தலையில். துன்பங்களையெல்லாம் பொறுமையாக ஏற்கும்படி ஆசிரியர்களை ஆயத்தம் செய்து விட்டால், அவர்கள் வழியாக நாட்டு மக்களுக்கு எதையும தாங்கும் இதயம் வந்துவிடுமென்று, அக்கால நிர்வாகிகள் நினைத்தார்கள் போலும். செங்காடு பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியின் பெற்றோர் சங்க விழாவும் சுகாதார விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், நான் கலந்து கொள்ள வேண்டுமென்று தலைமை ஆசிரியரும் ஊராட்சி மன்றத் தலைவரும் அடம்பிடித்தார்கள். எனக்குப் பேச வராது என்று சொல்லிப் பார்த்தேன். 'வராதது ஒன்றும் இல்லை' என்று ஊக்கப்படுத்தினார் அய்யர். 'நாளை பெரிய அதிகாரியாகிக் கற்றுக்கொள்ளத் தவிப்பதற்குப் பதில், இப்போதே கற்றுக்கொள்வது எளிது. தண்ணிரில் இறங்கினால் நீச்சல் வரும். பேசத் தொடங்கினால், போடு போடுவென்று நாளை பேசலாம்' என்று ஊராட்சித் தலைவர் உடுக்கை அடித்தார். என்னால் மறுக்க இயலவில்லை. தாட்சணியம் பற்றி ஒப்புக் கொண்டே மிகச் சிலவற்றுள் இது ஒன்று. விழாவன்று துணிந்து பேசினேன். நாற்பது மணித் துளிகள்; மக்கள் நகரவில்லை. எனக்குத் தன்னம்பிக்கை பிறந்தது. பேச மறுத்து ஒளியத் தேவையில்லை, என்னும் உணர்வு பெற்றேன். என்னைப் பேச்சுத் துறையில் தள்ளிவிட்ட அவ்விரு நல்லாருடைய பெயர்களும் மறந்து போய்விட்டன. எவ்வளவு பெரிய தவறு. அதற்காக வெட்கப்படுகிறேன். பெயர் மறந்த அவர்களுக்கு என் நன்றி. 68. பாரதப் புதல்வனின் புலம்பல் என்னைப் பேச்சு மேடைக்கு இழுத்துவிட்ட செங்காட்டுப் பெரியவர்களின் பெயர்களை மறந்துவிட்டதைப் போல், எழுத்துத் துறையில் இறக்கிவிட்டவர்களை மறக்கவில்லை. அவர்களில் ஒருவர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர், தியாகி நாராயணசாமி ஆவார். அவர் நடத்தி வந்த, 'பாரதி' என்னும் திங்கள் இதழில். 1934ஆம் ஆண்டு சனவரித் திங்கள், முதற் கட்டுரை எழுதினேன். அதன் தலைப்பு - 'பாரதப் புதல்வனின் புலம்பல்' என்பதாகும். பாரதி - மாலை 5, மணி 10 இல் வெளியான அக்கட்டுரை இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/525&oldid=787435" இலிருந்து மீள்விக்கப்பட்டது