பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. நான் செய்த தவறுகள் தண்டனை வாங்கிக் கொடுத்தேன் நான் அப்பதவியில் இருந்தபோது இருவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க நேர்ந்தது. அதைப்பற்றி நான் பல இரவு கவலைப்பட்டதுண்டு. பிச்சிவாக்கம் என்றோர் சிற்றுார் கூவத்திற்கு மேற்கே, மூன்று நான்கு கல் தொலைவில் இருக்கிறது. அவ்வூரின் ஆட்சி மன்றத் தலைவர் ஒருவர் முதலியார்; வழி வழி வசதி படைத்தவர். அவர் குடும்பத்தைக் கவனிப்பதில்லை. ஊரில் இருப்பதில்லை. இளம் மனைவியையும் பிள்ளைகளையும் வாடவிட்டுவிட்டு, கூவம் என்னும் ஊரில் தாசி வீடே கதியாக இருந்தார். பிச்சிவாக்கத்திற்குப் போக, கூவம் வரை பேருந்தில் செல்ல வேண்டும். அங்கிருந்து போக, கோடைகாலத்தில் வாடகை வண்டி கிடைக்கக்கூடும். மற்றக் காலங்களில், ஏரிக்கரைமேல், வயல் வரப்புகளின்மேல் நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. முதன்முறை நடந்தே செல்ல நேர்ந்தது. ஊரில் தலைவர் இல்லை. பக்கத்து வீட்டுப் பெரியவர் என்னை அமைதிப்படுத்தி, தங்கவைத்து, அடுத்த நாள் காலை அனுப்பி வைத்தார். அடுத்த முறை வருகிற நாள் குறித்து விட்டே சென்றேன். அப்போதும் தலைவர் கிடைக்கவில்லை. இரு பயணமும் வீணான பிறகு, பதிவு அஞ்சலில் அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது. மற்றொரு நாள் குறித்து, அன்று கணக்குகளை, பிச்சிவாக்கத்தில் காட்ட ஏற்பாடு செய்யும்படி அறிவிப்புக் கொடுத்தேன். அப்படிப் போனபோதும் அவர் இல்லை; ஆனால் கணக்குகளைப் பக்கத்து வீட்டில் யாரோ ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுப் போய் இருந்தார். அவற்றைத் தணிக்கை செய்தேன். ஈராண்டுகளாக வந்த தொகைகளை, கணக்கில் வரவு வைத்திருந்தார். வேலைகள் ஏதும் நடக்கவில்லை. வந்த பணம் அஞ்சல் சேமிப்பு வங்கியில் வைக்கப்பட்டதா? இல்லை. கணக்கோடு பணத்தைக் கொடுத்து விட்டுப் போயிருந்தாரா? அதுவுமில்லை. இந்தத் தகவல்களைக் கணக்கு ஏட்டில் பதிந்து விட்டுத் திரும்பினேன். என்னுடைய மாதாந்திர அறிக்கை மேலிடம் சென்றது. பிச்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மேல், பொதுநிதியைக் கையாடியதாக வழக்குப் போடும்படி கட்டளை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/532&oldid=787448" இலிருந்து மீள்விக்கப்பட்டது