பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 நினைவு அலைகள் குளிர்விக்கும் மழைக்கு முன்பு பொறுக்கவொண்ணாத புழுக்கம் இருப்பது உண்டு; மின்னலும் இடியும் அச்சுறுத்துவது இயற்கை. சைதை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைத்த ச்ெய்தி வான் மழையாகக் குளிர்வித்தது. அதைப் பயன்படுத்திக் கொள்வது எளிதல்லவே இருக்கும் வேலையை உதறிவிட்டு வருவது அறிவுடைமையல்ல. விடுப்புப் பெற்றுப் போகும்படி, அலுவலில் பட்டறிவு நிறைந்த நண்பர்கள் கூறினார்கள். விடுப்புக் கணக்கைப் பார்த்தார்கள். எனக்கு இருந்த விடுப்பு மூன்று திங்களுக்கும் குறைவு. அக்காலம் வரையில்தான் எனக்கு முழுச்சம்பளம் கிடைக்கும். மேலும் மூன்று திங்களுக்கு அரைச் சம்பளத்தோடு விடுப்புக் கொடுக்கலாமென்னும் விதியை ஒருவர் சுட்டிக்காட்டினார். பாக்கி உள்ள மூன்று திங்களுக்கு? ஊதியம் இல்லாத விடுப்புக் கேட்கும்படி ஆலோசனை கூறினார்கள். விடுப்பைப் பொறுத்த மட்டிலும் மேற்கூறியபடி மூன்று வகை விடுப்புகளைச் சேர்த்துச் சமாளித்து விடலாம் என்று தோன்றியது. அடுத்த சிக்கலை எப்படி அவிழ்க்க அது என்ன சிக்கல்? ஆசிரியர் பயிற்சி பெறும் காலத்தின் செலவை எப்படிச் சமாளிப்பது? இக்கவலை மின்னிற்று. செலவினப் பட்டியல் போட்டுப் பார்த்தேன். கல்லூரியில் சம்பளம் இல்லை: கல்லூரியிலிருந்து உதவித் தொகையும் இல்லை. பிற்காலத்தில், ஆசிரியர் பயிற்சி பெறுவோர் அனைவருக்கும் திங்கள் தோறும் உதவித்தொகை அளிக்கும் முறை வந்தது. 'தம்பியர் பெற்ற இன்பம் யானுமே பெற்ற தன்றோ என்று என் தலைமுறையினர் நிறைவு கொள்கிறார்கள். சம்பளம் இல்லாவிட்டாலும் தனிக் கட்டணம் உண்டு. அப்போது அது பெரிய தொகையல்ல. அடுத்த செலவு சாப்பாட்டுச் செலவு அது எவ்வளவு? ஒட்டலில் சாப்பிடுகிறேனா, விடுதியில் சாப்பிடுகிறேனா என்பதைப் பொறுத்துச் செலவு இருந்தது. வெளியில் எங்காவது வாடகைக்கு அறை எடுத்துக்கொண்டு ஒட்டலில் சாப்பிட்டு வந்தால் செலவு குறைவாக இருக்கும். ஆனால் அன்றைய சைதாப்பேட்டை, சென்னை மாநகராட்சியோடு இணையாத தனி நகராட்சி. அந்நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியில்லை. அன்றைய சைதாப்பேட்டை, கொசுவுக்கும் யானைக்காலுக்கும் பெயர் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/549&oldid=787481" இலிருந்து மீள்விக்கப்பட்டது