பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 O நினைவு அலைகள் சாதாரண மனிதன் முழுவதும் தன்வயமானவன் அல்லன்; அவன் சமுதாயத்தின் உறுப்பினன்; அதிலிருந்து பிரிக்க முடியாத உறுப்பினன். எனவே, சமுதாயத்தால் தாக்கப்படுபவன்; பாதிக்கப்படுபவன். சமுதாயத்தின் அமைதி, தனி மனிதனின் அமைதிக்கு உதவி. சமுதாயக் கொந்தளிப்பு தனி மனிதனின் உள்ளத்தில் அலைகளை எழுப்பும். சாதாரண இளைஞனாகிய நான் - சமுதாயத்தின் சிந்தனை நீரோட்டங்களில் இளமையிலேயே அக்கறை கொண்டு விட்ட நான் - ஆசிரியப் பயிற்சி பெறும்போது, பெரிதும் அலைக்கழிக்கப்பட்டேன். தமிழ்ச் சமுதாயம், அன்று கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. புதிய புயல் ஒன்று அப்போது உருவாயிற்று. பெரியார் ஈ.வெ. ராமசாமியாரின் தன்மான இயக்கத்தால் ஈர்க்கப்படாத தமிழர்கள்கூட, அலறி அடித்துக்கொண்டு எழுந்தார்கள்: மனம் கொதித்துக் கூடினார்கள். அக்கால கட்டத்தில், இரு தமிழர் கூடினால், சில மணித்துளிகளில், தொட்டது ஒன்றே ஒன்றைத்தான்; வாதிட்டது ஒன்றைப் பற்றித்தான். எந்த ஒன்றைப்பற்றி? கட்டாய மொழி இந்தி சென்னை மாகாண உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக்குவது பற்றி. இவ்விவகாரம் எப்படி எழுந்தது? அனைத்திந்திய காங்கிரசின் திட்டங்களில் ஒன்று இந்தி மொழியை இந்திய நாடு முழுவதிலும் பரப்புதல். அதற்காகப் பல மாகாணங்களிலும் இந்திப் பிரசார சபைகள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின், தமிழ் நாட்டுப் பகுதியிலும் அத்தகைய அமைப்புகள் நிறுவப்பட்டன. அக்காலக் காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஈ.வெ. ராமசாமி அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார். ஈரோட்டில் தாம் முன்னின்று தொடங்கிய இந்திப் பள்ளிக் கூடத்தை ஈராண்டு தம் சொந்தச் செலவில் நடத்தினார். அதோடு, பதினைந்து மாணவர்களுக்குத் தம் செலவில் உணவும் உறையுளும் அளித்தார். திருச்சியில், பீகாரைச் சேர்ந்த அபேதானந்தா என்பவரைக் கொண்டு இந்தி பரப்பும் சபை நிறுவியதைத் தொடங்கி வைத்தார். ஆனால் 1926ஆம் ஆண்டிலேயே ஈ.வெ.ராமசாமி, தமிழ் நாட்டில் இந்தியைப் பரப்புவதை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/553&oldid=787492" இலிருந்து மீள்விக்கப்பட்டது