பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நினைவு அலைகள் முன்னேறத் துடிக்கும் எல்லாச் சமுதாயத்திற்கும் பொருத்தமான நல்வழியல்லவா அது? வைகறைத் துயில் எழு என்பதை வெறும் பழமொழியாகக் கொள்ளக் கூடாது; வாழ்க்கை நெறியாகவே கொள்ள வேண்டும். இதைச் சுயமரியாதை இயக்கச் சாமியார், நினைவுபடுத்தினார். அது, திருவாளர் காசிராமனின் ஆயத்தத்தைக் கண்டபோது, என்னுடைய நெஞ்சில் உறுத்திற்று. மாயூரம் சந்திப்பில் கீழே இறங்கிப் போன திரு. காசிராமன் காப்பியோடு வந்தார். எனக்குக் கொடுத்தார். அப்புறமே நான் ஆயத்தமானேன். கும்பகோணம் வந்தடைந்தேன். இரயில் நிலையத்தை நெருங்கும்போது, 'யார்தங்களை அழைத்துப் போக வருவார்?' என்று நண்பர் கேட்டார். 'இறங்கிய பிறகே தெரியும். ' 'பரவாயில்லை; நான் தங்களோடு காத்திருக்கிறேன். அழைத்துப் போக வேண்டியவர்கள் வந்தால் சரி, இல்லாவிட்டால், நானே அழைத்துக் கொண்டு போகிறேன். எங்கள் விருந்தினர் இல்லத்தில் தங்கலாம். அப்புறம் நான் உரியவர்களுக்குத் தகவல் கொடுக்கிறேன்' என்று திட்டம் தீட்டினார் இரயில் நின்றதும் போர்ட்டரை அழைத்தார். என் பெட்டி படுக்கையைக் கொடுத்தார். அப்புறம் தம்முடையவற்றைக் கொடுத்தார். இறங்கி, என்னோடு நின்று கொண்டிருந்தார். என்னை வரவேற்க வந்த நண்பர்கள் மற்றோர் கோடியிலிருந்து இரண்டு மூன்று நிமிடங்களில் வந்து சேர்ந்தனர். அப்போதும் அவர்களிடம் என்னை ஒப்படைக்கவில்லை. எல்லோருமாக வெளியே சென்றோம். எனக்காக இந்திய சோவியத் கலாச்சாரக் கழகப் புரவலர் திரு. அப்துல் ரசாக் அவர்களுடைய பெரிய கார் காத்திருப்பதைத் தெரிந்து கொண்டார். என்னை அதில் ஏற்றி அனுப்பிய பிறகே திரு. காசிராமன்தம் கார் ஏறி வீட்டுக்குச் சென்றார். அன்று மாலை நடந்த பாசிச எதிர்ப்புக் கூட்டத்தில் திரு. காசிராமன் பேசினார். கடைசியாக நான் பேசினேன். என் பேச்சைப் பொறுமையாகக் கேட்டார். என்னை வழியனுப்பி வைத்த பிறகே வீட்டிற்குப் போனார். சாதாரணமாக, தாம் பேசி முடிந்ததும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் காசி ராமன் போய்விடுவார். உங்கள் பேச்சைக் கேட்க வேண்டுமென்பதற்காக இன்று காத்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/56&oldid=787503" இலிருந்து மீள்விக்கப்பட்டது