பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 529 ஈ.வெ. ராமசாமி, காங்கிரசை விட்டு வெளியேறக் காரணமாயிருந்த தளம் காஞ்சிபுரம் மாநில மாநாடு ஆகும். அதற்கு மூலவராக விளங்கியவர் திரு. திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆவார். அதற்குப் பிறகும் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்தது உண்டு. எப்போதோ சிலபோது, அவர்களிடையே பார்வையில் ஒருமை கண்டதுண்டு. பெரியார் இயக்கத்தவர் அல்லாத தொடர்ந்து காங்கிரசுக் காரராகவே இருந்த இராயப்பேட்டை முனிவர், திரு.வி.க., பெரியார் சிறைப்பட்டதைப் பற்றி, நெஞ்சுருகி எழுதிய நவசக்தி தலையங்கம் நினைவு கூர்தலுக்கு உரியது. திரு ஈ.வெ. ராமசாமி கடுங்காவல் தண்டனை ஏற்றுச் சிறைக் கோட்டம் நண்ணினார். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுகத் தாங்கிய தடியுடன், அவர் சிறை புகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்கும் என்பதில் அய்யமில்லை. 'முதுமைப் பருவம் காவல் கடுங்காவல் என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது. 'நண்பர் ஈ.வெ.ரா.வுக்குச் சிறைவாசம் பழையது; மிகப் பழையது: புதியது அன்று முன்னே, அவர் ஒத்துழையாமையில் ஈடுபட்டும் தீண்டாமையை முன்னிட்டும் மதுவிலக்கை, சமதர்மத்தைக் குறிக்கொண்டும் பலமுறை சிறை சென்று உள்ளார். இம்முறை அவர் இந்தி எதிர்ப்புக் காரணமாகச் சிறை நுழைந்திருக்கின்றார். சிறைக்கோட்டம் அவருக்கு ஒரு விதத் தவக்கோட்டம் ஆயதுபோலும்! 'சிறைப் பறவையாகிய ராமசாமி வரலாற்றை விரித்துக் கூற வேண்டுவதில்லை. "அவர்தம் வரலாற்றில் அறியக்கிடக்கும் நுட்பங்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன இடையறாச்சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்யமின்மை, உள்ளொன்று வைத்துப்புறம்பொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும் திறன், கரவு - சூழ்ச்சியின்மை முதலியன. 'இவை அவர்தம் வாழ்வாக அரும்பி, மலர்ந்து, காய்த்து, கனிந்து நிற்கின்றன. இந் நீர்மைகள் அவரை அடிக்கடி சிறைபுகச் செய்கின்றன போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/572&oldid=787530" இலிருந்து மீள்விக்கப்பட்டது