பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. இரகசியம் காத்தேன் திரு. சங்கரலிங்க தாசின் அரிய ஆலோசனைப்படி நடந்தேன். இளந்துணைப்பள்ளி ஆய்வாளர் பதவிக்கு நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே, கல்வித் துறையின் கீழ் நிலை அலுவலருக்கான தேர்வுகளை எழுதினேன். ஒவ்வொன்றிலும் முதல் முறையிலேயே வெற்றியும் பெற்றேன். பின்னர், மேனிலை அலுவலர்க்கான தேர்வுகளை ஆர்வத்துடன் எழுதி, பெரிய பதவிகளுக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தேன். - ஆனால், இளந்துணை ஆய்வாளர் நியமனம் ஈராண்டுபோல் தள்ளிக் கொண்டே போயிற்று. அலுவலகங்களில் அலுவலர்களைவிட, மற்றவர்கள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும் என்ற உண்மையை அப்போது புரிந்து கொண்டேன். நான் மாவட்ட அலுவலராகவோ, மாநகராட்சி அலுவலராகவோ, இயக்குநராகவோ, தலைமைக் கல்வி ஆலோசகராகவோ பணிபுரிந்த காலங்களிலும், அலுவலக எழுத்தர், கண்காணிப்பாளர்.தயவில் எவரும் வாழத் தேவையில்லாத நிலையை உருவாக்கினேன். அதனால், பலருடைய எரிச்சலையும் புகைச்சலையும் தேடிக் கொண்டேன். திருப்பெரும்பூதுளில் தேர்தல் நான் திருப்பெரும்பூதுாரில் அலுவல் பார்த்தபோது, அவ்வூராட்சி மன்றத்தின் தேர்தல் வந்தது. அது, பேரூர் ஆட்சி மன்றம். எனவே மாவட்டப் பஞ்சாயத்து அலுவலரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. இருப்பினும் ஊராட்சித் தலைவர் தேர்தலை நடத்தும்படி அரசிடமிருந்து எனக்கு ஆணை வந்தது. * உறுப்பினர்கள் கூடி தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களிடையே இரு கட்சிகள். ஒரு கட்சி மற்றக் கட்சியை விழுங்கிவிடத் துடித்தது. இதனால், தலைவர் தேர்தலில் கடும் போட்டி இருந்தது. தலைவர் தேர்தல் இரகசிய வாக்கு முறையில் நடக்க வேண்டும். வேண்டிய வாக்குப் பெட்டிகளைச் சைதாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்று வரவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/584&oldid=787543" இலிருந்து மீள்விக்கப்பட்டது