பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ILHH LH நினைவு அலைகள் மாவட்ட ஆட்சிக்குழு காங்கிரசின் கையில் இருந்தது. விசாரிக்க வேண்டிய மாவட்டப் பஞ்சாயத்து அலுவலரோ ஆட்சிக் குழுவின் மேற்பார்வைக்கு உட்பட்டவர். எனவே, அவர் மேல் செல்வாக்குக் குவியலாமென்று, அரசு நினைத்தது போலும். பிராந்திய ஊராட்சி மன்றங்களின் ஆய்வாளராக இருந்த திரு. அரங்கசாமி முதலியாரையே விசாரணைக்கு அனுப்பியது. அவர் நல்ல பெயர் எடுத்த அதிகாரி. அவர் உத்திரமேரூருக்குச் சென்றார். செல்லும்போது மாவட்டப் பஞ்சாயத்து அலுவலர் உடன் சென்றார். திரு. முதலியார், விசாரணையைக் குற்றவியல் நடுவரின் பாணியில் தொடங்கினார். அத்தோரணை விசாரிக்கப்பட்டவர்களுக்குப் பிடி கொடுத்துவிட்டது. திரு. ஆராவமுது அய்யங்கார் முறைத்துக் கொண்டார். 'உங்களைப்போல ஆறு பேருக்குச்சம்பளம் கொடுக்கும் நிலையில் நாங்கள் வசதியுடன் இருக்கிறோம். நீங்கள் முன்கூட்டியே ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். உங்கள் விசாரணை நடுநிலைமையில் இராது. எனவே நாங்கள் விசாரணையில் பங்கு கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டு வெளிநடப்புச் செய்துவிட்டார். அப்படியே மாகாண அதிகாரிக்கும் அரசுக்கும் தந்தி கொடுத்து விட்டார். விசாரணை நடத்த முடியவில்லை. பிராந்திய ஆய்வாளர் திரும்பினார். பிறகு, எவரைக்கொண்டு விசாரிப்பது என்று சிந்தித்தார்கள். மாவட்டப் பஞ்சாயத்து அலுவலரும் முன் கூறிய நிகழ்ச்சியின் போது திரு. அரங்கசாமியோடு இருந்ததால், அவர் விசாரிக்கப் போகவேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. கழுவுக்கேற்ற ஆளாக நான் தென்பட்டேன். சில நாள்களுக்குப் பின்னால், புகார் கோப்புகள் என் கைக்கு வந்து சேர்ந்தன. முடிந்த அளவு விரைவாக விசாரித்து அறிக்கை கொடுக்கும்படி ஆணையும் உடன் வந்தது. யானையும் யானையும் மோதும் போது, சுண்டெலி குறுக்கிடும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனினும் அலுவல்களில் விருப்பு வெறுப்புகளையோ, என் தனி வாழ்க்கைக் கொள்கைகளையோ சிறிதும், புகவிடாது, பயிற்சி பெற்று வந்த எனக்கு இந்தப்பொறுப்பு, அச்சம் ஊட்டவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/589&oldid=787548" இலிருந்து மீள்விக்கப்பட்டது