பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 549 விசாரணைக்குப்பின் உத்திரமேரூரில் இருந்து வரமுடியாமல் சிக்கிக்கொண்டால் தங்குவதற்கு இடம் கிடையாது. பஞ்சாயத்து அலுவலகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தயவில் தங்க வேண்டியிருக்கும். பாதுகாப்புடன் தங்கினேன் இவற்றைச் சமாளிப்பது எப்படி என்று முன்கூட்டியே திட்டமிட்டேன். நாடகாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் உறவினர் திரு. குழந்தைவேலு உத்திரமேரூரில் அப்போது துணைப்பதிவாளராக வேலை பார்த்துவந்தார். நான்காஞ்சிபுரத்தில் எட்டாவது ஒன்பதாவது வகுப்புகள் படித்துக் கொண்டிருக்கையில் நான் குடியிருந்த வீட்டிலேயே அவர் குடியிருந்தவர். ஆங்கிலப் புலமை மிக்கவர். அவ்வப்போது என் பாடங்களைத் தெளிவுபடுத்தி என்னை ஊக்குவித்தார். அவருக்கு எழுதினேன். உத்திரமே ரூரில் தங்கும் மூன்று நாள்களுக்கு அவருடைய உதவியைக் கோரினேன். குறிப்பாகத் தங்குமிடமும் காவலும் வேண்டி எழுதினேன். திரு. குழந்தைவேலு அதற்கு ஏற்பாடு செய்தார். வங்கி மாடியொன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு எனக்குத் தகவல் கொடுத்தார். அவருடைய கடைநிலை ஊழியர்கள் இருவரை எனக்குக் காவலாக இரவில் தங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தேவைப்பட்டால் தாமும் என்னுடன் தங்குவதாகவும் எழுதியிருந்தார். இவ்வளவு முன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டேன். குறிப்பிட்டநாள் என்னுடைய கடைநிலை ஊழியர் மேகவர்ணத்தை அழைத்துக்கொண்டு உத்திரமேரூர் போய்ச் சேர்ந்தேன். பேருந்து நிலையத்தில் தமது ஊழியர்களோடு காத்திருந்த திரு. குழந்தைவேலு என்னை முதலில் தமது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரங்கழித்துப் பஞ்சாயத்து அலுவலகத்திற்குத் தக்க துணையுடன் அனுப்பி வைத்தார். அங்கே தலைவரும் துணைத் தலைவரும் என்னை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். f அவர்களோடு புகார்களை எழுதிய உறுப்பினர்களும் இருந்தனர். அவர்கள் தங்கள் முகவரிகளைக் கொடுத்து இருந்ததால், அவர்களுக்கும் முன்அறிவிப்புக் கொடுத்துவிட்டே அங்குச்சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/592&oldid=787552" இலிருந்து மீள்விக்கப்பட்டது