பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது. சுந்தரவடிவேலு 551 'பொய்க் குற்றஞ் சாட்டுகிறவர்கள் அப்படித்தான்; மெய்ப்பிக்கிறவர்கள் அப்படி அல்ல' என்று நான் சொல்லவும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள். குற்றச்சாட்டுகளில் ஒன்று, புதிதாகக் கட்டிய பொதுக்குளத்தின் படிக்கட்டுகளை அளக்கும்போது, உள்ளதற்கும் அதிகமாகக் கணக்கு எழுதி, அதற்கான பணத்தை ஏப்பம்விட்டுவிட்டார்கள் என்பதாகும். மற்றக் குற்றச்சாட்டுகளையெல்லாம் ஆய்ந்த பிறகு, கடைசியாகக் குளத்தண்டை போனோம். அதன் அளவைப் பற்றிய முழுத் தகவல்களையும் பஞ்சாயத்து அளவைப் பதிவில் இருந்தபடியே நகல் எடுத்துக்கொண்டேன். பிறகே குளத்தண்டை சென்றேன். பஞ்சாயத்து நிர்வாகிகள் காட்டியதை எல்லோர் முன்னிலையிலும் அளந்து பதிந்து கொண்டேன். அதோடு விசாரணை முடிந்தது, அப்போது மாலை அய்ந்து மணி. எச்சரிக்கையாக இருந்தேன் இரவு எட்டு மணிக்குத்தான் பேருந்து புறப்படும். பேருந்து நிலையத்தில் மின்விளக்குகிடையாது. இரண்டு பெட்ரோமாக்ஸ்' விளக்குகளே உண்டு. அவை அடிக்கடி நின்றுபோகும். அப்போது பேருந்து நிலையம் இருளில் மூழ்கிவிடும்; எதுவும் நடக்கலாம். விசாரணையை முடித்தநாள், முன் இருட்டுநாள். இரவுபத்துமணிக்குப் பிறகே, நிலவொளி வரும். இது என்மனத்தில் உறுத்திற்று. பேருந்தும் திரு. இராமசாமி அய்யருடையது. பேருந்து நிலையமும் அவரது இயக்கத்திற்கு ஏற்பச் செயல்படுவது. அன்றிரவு விளக்குகளை அனைத்து விட்டு, கும்மிருட்டில் குண்டர்களை விட்டு, குற்றச்சாட்டுக் கோப்பையும் விசாரணைப் பதிவுகளையும் கொண்ட பெட்டியைப் பறித்துக் கொண்டால், என்ன செய்வது என்ற அச்சம் என் உள் எப்படியோ மின்னிற்று. விழிப்பே அச்சக் கொல்லியல்லவா? உடனே சூழ்ச்சியொன்று செய்தேன். என்ன சூழ்ச்சி? அலுவலகப் பெட்டியிலிருந்த கோப்புகளை எடுத்துவிட்டேன். அதற்குள் நாளிதழ்களையும் அழுக்கு உடைகளையும் நிரப்பிக் கனமாக்கினேன். கோப்புகளை மடித்து நீண்ட உறையில் இட்டு, என் ஊழியரின் பாதுகாப்பில் வைத்தேன். அவர் அதைத் தன் கோட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/594&oldid=787554" இலிருந்து மீள்விக்கப்பட்டது