பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 553 அவ்வறிக்கையோ, இரகசியமானது. எனவே, தட்டெழுத்தர் ஒருவருக்குக் கூலி கொடுத்து, படி எடுக்கக்கூடாது, மாவட்டப் பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுத்துப்படியெடுக்கலாமாவென்று பஞ்சாயத்து அலுவலரைக் கலந்து ஆலோசித்தேன். படியெடுத்து முடிவதற்குள் பலருக்கும் தெரிந்துவிடும். எனவே, நீயே எழுதிவிடு' என்றார். அவ்வேலையைச் செய்து முடிப்பதற்குள் போதும் போது மென்று ஆகிவிட்டது. அப்படிச் செய்து முடித்ததும் சைதாப் பேட்டைக்குச் சென்று அதை உரிய அலுவலரிடம் சேர்த்தேன். நம் பொறுப்பு முடிந்தது; மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்தால் நமக்கென்ன? என்று தாமரையிலைத் தண்ணிராக இருந்தேன். பல ஊர்களுக்குச் சென்று, அன்றாட வேலைகளைக் கவனித்தேன். மிரட்டலும் பாராட்டலும் என்னுடைய அமைதியைக் கலைக்கத் தந்தி ஒன்று வந்தது. 'மாவட்ட ஆட்சிக்குழுவின் தலைவரான ஆலந்துளர் திரு.துரைசாமி ரெட்டியார், என் அறிக்கை சரிதானாவென்று தணிக்கை செய்யும் பொருட்டு உத்திரமேரூருக்குச் செல்கிறார். 'அந்தத் தணிக்கையின்போது, நான் அவருடன் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாள்கள் தொடர்ந்து இருக்கவும் நேரிடலாம். 'அதற்கும் ஆயத்தமாக அங்குச் செல்லவும்' இப்படித் தந்தி வழி ஆணை வந்தது. - ஆணைப்படி சென்றேன். குறித்த நேரத்தில் ஆட்சிக்குழு மாவட்டத் தலைவரை, உத்திரமேரூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கண்டேன். விசாரணையைத் தொடங்கு முன், திரு. துரைசாமி எல்லோர் முன்னிலையிலும் என்னைப் பார்த்து மிரட்டினார். 'குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் செல்வர்கள்; மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள்; அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுப் பதவியில் இருப்பவர்கள். 'யாரோ, சாதாரண ஆள்கள், அவர்கள்மேல் குற்றஞ்சாட்டினால் அதற்கு இவ்வளவு பெரிய அறிக்கையா? 'உம் அறிக்கையில் நான் தவறுகள் கண்டு பிடித்துவிட்டால் அது உம் வேலைக்கு வேட்டாகும்' என்றார். அம்மிரட்டலுக்கு நான் அஞ்சவில்லை. மடியில் கனமிருந்தால் அல்லவா வழியில் அச்சம் ஏற்படும்! மேலும் ஏடுகளை, கணக்குகளை எவ்வளவு விழிப்பாகப் பார்க்க முடியுமோ அவ்வளவு விழிப்பாகப் பார்த்த பிறகே அறிக்கையை எழுதினேன்; ஒரு பாற் சாயாது எழுதினேன் என்னும் முழு நிறைவோடு இருந்த என்னை அம்மிரட்டல் சிறிதும் அசைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/596&oldid=787556" இலிருந்து மீள்விக்கப்பட்டது