பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 563 அதன்மேல், என் முகவரி, முத்து முத்தான கையெழுத்தில் இருந்தது. பழக்கமில்லாத கையெழுத்து; துடிப்பைப் பெருக்கிற்று. அக்கடிதத்தை உடனே உடைத்தேன்; படித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை; மீண்டும் படித்தேன். நம்பிக்கை முளைக்கவில்லை. மூன்றாம் முறை படித்த பிறகே, அக்கடிதம் மெய்யாக இருக்கலாம் என்று எனக்கு நானே உறுதி கூறினேன். ஏன்- அக்கடிதத்திற்குப் பதில் எழுத வேண்டிய முகவரியும் இருந்தது. என்னை வியப்பில் ஆழ்த்திய அக்கடிதம் ஆங்கில மொழியில் இருந்தது. அது, 'அன்புமிக்க அய்யா என்று தொடங்கியது. அப்புறம்? 'பழக்கமில்லாத ஒர் இளம்பெண் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதுவதற்காக மன்னிப்புக் கோருகிறேன். அதைக்கொண்டு, என்னைப்பற்றித் தவறாக நினைக்க வேண்டாமென்று கோருகிறேன்" என்று ஆழமாகப் பீடிகை போட்டுக் கொண்டது, பிறகு 2. நான் எனக்காக இக்கடிதத்தை எழுதவில்லை. என் தோழிக்காக எழுதுகிறேன். என் தோழியின் ஒப்புதலோடு இதை எழுதுகிறேன். 'நீங்கள் என்னையோ, என் தோழியையோ அடையாளங் கண்டு கொள்வீர்களா என்றுகூட அய்யப்படுகிறேன். 'ஒவ்வொரு முறையும் உங்கள் கண்களில் நாங்கள் பட்ட நொடியில் நீங்கள் வேறு பக்கம் திரும்பிவிட்டீர்கள்; எங்களை ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதே எங்கள் மதிப்பீடு. “மாறாக நாங்கள், சற்றுத் தொலைவில் இருந்தபடியே பல முறை உங்களைக் கவனித்து இருக்கிறோம். 'உங்கள் உரையாடல்களும் எங்கள் காதுகளில் வீழ்ந்தது உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் சமுதாயம், பொருளியல் பற்றி முற்போக்குக் கருத்துடையவர் என்று எங்களுக்குத் தோன்றியது? சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க அவாவுகிறீர்கள் என்று புரிந்தோம். 'ஒரு முறைக்குப் பலமுறை, நீங்கள், உங்கள் நண்பரிடம் அப்படிக் கூறியதைக் கேட்டதால்தான் என் தோழிக்குத் துணிச்சல் வந்தது. இருப்பினும் தானே எழுதத் தயக்கம். 'என் தோழி தங்களை மணக்க விரும்புகிறாள். அக்கருத்தினை உங்களுக்குத் தெரிவிக்கவே, இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். 'இவ்விழைவு உங்களுக்கு ஏற்புடையதாயின், தயவு செய்து எனக்குப் பதில் எழுதுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/606&oldid=787568" இலிருந்து மீள்விக்கப்பட்டது