பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57O நினைவு அலைகள் அதற்குப் பிறகும் பல நாள் பதில் எழுதாமல் இருந்தேன். அப்புறம் எழுதிய பதிலில், நான் கூடிய விரைவில் சென்னைக்கு வரும்போது, நேரில் வந்து காண்பதாக, அறிவித்திருந்தேன். பல நாள்கள் ஓடின. பிறகு நேரில் காண நாளும் நேரமும் குறித்து எழுதினேன். அக்கடிதமும் தோழிக்கே, அந்நேரம் பொருத்தமானது என்று பதில் வந்தது. குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட மணித்துளி புகழ் வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத் தாவர இயல் ஆய்வுக் கூடத்திற்குள் நுழைந்தேன். காந்தம்மாவும் தோழியும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். அங்கு வேறு யாரும் இல்லை. வாருங்கள் என்று வரவேற்றார்கள். நீண்ட அகன்ற ஆய்வு மேசையின் ஒரு பக்கம் அவர்கள் உட்கார, மறுபக்கம் நான் அமர்ந்தேன். அப்போது மாலை நாலரை மணி. சில மணித்துளிகள் உப்புச் சப்பில்லாத கேள்விகள். 'எப்போது சென்னைக்கு வந்தீர்கள்? எதுவரை இங்கே தங்குவீர்கள்? சென்னையில் எங்கே தங்குகிறீர்கள்? இத்தகைய கேள்விகளுக்குப் பிறகு, என் குடும்பத்தைப்பற்றிக் கேள்விகள். அந்நிலையில், தோழி எழுந்து சென்று நழுவிவிட்டார்.எனவே என் பெற்றோர்களை, உறவினர்களைப் பற்றிய நீண்ட விசாரணை நடந்தது. என் நிலையை விளக்கினேன் 'என் தந்தை, தன்மான இயக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். தாய், வைதீக மரபுவழி வந்த அம்மை. 'இருப்பினும் திருமணம் என்று வரும்போது நான் கலப்புத் திருமணம் செய்து கொள்வதற்குத் தந்தை ஒருபோதும் உடந்தையாக இருக்க மட்டார் என்பது என் அச்சம். 'பல நல்ல பெண்களை நான் ஒதுக்கி விட்டேன் என்பது அவருடைய கருத்து. அதனால் என்மேல் மிகுந்த கோபமும் எரிச்சலும் கொண்டு இருக்கிறார். 'என் தம்பியர் மூவருடைய எதிர்காலம் பற்றியும் அவர் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார். அவர்கள் என்னைப் போன்றவர்கள் அல்லர். சாதுவானவர்கள். எனவே கலப்புத் திரு மனத்திற்கு முன்வராது போகலாம். நான் உறவு விலக்கத்தை எதிர் பார்த்தே கலப்புத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். அப்படிச் செய்யும்போது, என்னைவிட என் தம்பிகள் நிலையே சங்கடமாகலாம். இவற்றை எல்லாம் எண்ணி, என் தந்தை என்னுடைய திருமணம், பிறந்த முதலியார் சாதியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/613&oldid=787576" இலிருந்து மீள்விக்கப்பட்டது