பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. மாப்பிள்ளை அழைப்பு பாராட்டுக் கூட்டத்திற்கு இசைந்தேன் அரக்கோணத்தில் இருந்து பொழுது விடியப் புறப்படும் வண்டியில் செங்கற்பட்டுவரை சென்றேன். அங்கு வண்டி மாறி, மதுராந்தம் சென்று அடைந்தேன். அப்புறம்? பெரியாரோடு கலந்துரையாடியதன் சுருக்கத்தைத் தோழர் குருசாமிக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதினேன். பெரியார் கொடுத்த தேதிகளை அறிவித்தேன். அதில் ஒரு நாளைக் கோடு இட்டு அந்நாளில் திருமணப் பதிவை வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறினேன். சில நாள்களில் பதில் வந்தது. பெரியாரிடமிருந்து விரிவான கடிதம் வந்ததாக அது அறிவித்தது. அந்தக் கடித்திலும் பெரியார் சென்னைக்குவர வசதிப்படும் நாள்களைக் குறித்து எழுதியிருந்தாராம். அதோடு, திருமணம் பதிவான இரண்டொரு நாள்களில் எங்களுக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்யும்படியும் எழுதி இருந்தாராம். பாராட்டுக் கூட்டத்தைப் பற்றி நான் எழுத மறந்துவிட்டேன். ஏன்? இளமை தொட்டு எனக்கு என்னைப்பற்றிய சிந்தனை குறைவு. என்கருத்துகள், கொள்கைகள் பற்றியே என் சிந்தனைகள் சுழலும். அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்குத் துாண்டில் முட்களாக, என்னைப் பாராட்டுவதை, பிற்காலத்தில் அடிக்கடி நான் ஏற்றுக் கொண்டது உண்டு. அவற்றால் நான் மகிழ்ந்தது சிறிதே. அவற்றைப் பொதுநலத்திற்கு ஆதாயமாக்கியதே என்னுடைய வரலாறு. அதைக்கூட அறியாத தமிழர்கள் என் மீது அழுக்காறு கொண்டு பொருமியது உண்டு. இன்றும் பொருமுவார் உண்டு. அது எனக்கு அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை. ஏன்? தமிழரின் அழுக்காறு வரம்பற்றது என்பதை என் இளமைப் பருவத்தே உணர்வதற்குப் பல வாய்ப்புகள் இருந்தன. எனவே அதற்கான விலையை நானும் கொடுக்க நேரிடும் என்று எனக்குத் தோன்றியது. அதற்கு என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டிருந்தேன். பெரியார் ஆலோசனையில் ஒன்றை நான் ஏற்றுக்கொண்டதைத் தோழர் குருசாமிக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/632&oldid=787598" இலிருந்து மீள்விக்கப்பட்டது