பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 நினைவு அலைகள் நான் ஏற்றுக்கொண்ட பெரியாரின் ஆலோசனை என்ன? 'கலப்புத் திருமணம் சாதி ஒழிப்புக்கு உயிர் நாடி. அத்தகைய திருமணங்கள் நடப்பதை நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். 'அதுவும் பட்டதாரிகள் அப்படிச் செய்வதைப் பெரிதுபடுத்தினால், மேலும் பலர், அந்த எதிர்நீச்சலுக்குத் துணிந்து வருவார்கள். 'கலப்புத் திருமணம் செய்து கொள்வோரைப் பாராட்டக் கூட்டம் நடத்தினால் அது பிறருக்கு ஆர்வம் ஊட்டும். இயக்கக் கொள்கையைப் பரப்பும் பொருட்டு, நீங்கள் பாராட்டுக் கூட்டத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்' என்று பெரியார் அவர்கள் பயணத்தின் போது என்னிடம் கூறினார். எத்தனைக்குத்தான் 'முடியாது’ என்று சொல்ல முடியும்? பாராட்டுக் கூட்டத்திற்கு இசைந்தேன். பெரியார், அதை மறக்காமல் தெரிவித் திருக்கிறார். திருமணத்தில் சிக்கல் தோழர் குருசாமி, காந்தம்மாவும் அவர் வீட்டார் அனைவரும் திருமணப் பதிவிற்கு உடன்படுவதாக எழுதினார். கூடிய விரைவில் நான் நேரில் சென்னைக்கு வந்தால், திருமணப் பதிவாளருக்கு முறைப்படி முன் அறிவிப்பு கொடுத்துவிடலாம் என்று கடிதத்தில் குறிப்புக் காட்டினார். நீண்ட நாள்கள் தாமதம் செய்யவில்லை. முன்கூட்டித் தகவல் கொடுத்து விட்டுச் சென்னைக்குச் சென்றேன். வழக்கம் போல என் தம்பி சிவானந்தம் வேலைசெய்த கடையில் தங்கினேன். அங்கிருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்குச் சென்றேன். தோழர் குருசாமியை அவரது இல்லத்தில் கண்டு விரிவாகப் பேசினேன். அப்போது காந்தம்மா வெல்லிங்டன் சீமாட்டிப் பயிற்சிக் கல்லூரியின் மாணவி. ஆசிரியப் பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு ஒரு நிபந்தனையிருந்தது. அது என்ன? பயிற்சி முடியும் வரை மாணவி, திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எழுத்து வாயிலாக உறுதி அளிக்க வேண்டும். காந்தம்மாவும் அவ்வுறுதி அளித்து விட்டே ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். இது எனக்கத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/633&oldid=787599" இலிருந்து மீள்விக்கப்பட்டது