பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சாதியற்ற மனிதனானேன்! பொழுது புலர்ந்தது. திருமண நாள் வந்தது; அது பஞ்சாங்கம் பார்த்த திருமண நாள் அன்று. உரியவர்களின் வசதிக்கேற்பக் குறிப்பிட்ட நாள் வந்தது. மேளம் கொட்டவில்லை. இசை பொழியவில்லை, இருப்பின் என்? தமிழர்தம் மானங்காக்க முரசு கொட்டிய தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி திருமண இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். பெரியாரின் பெரியார், ஈ.வெ. கிருஷ்ணசாமி உடன் வந்தார். ஈ.வெ. கிருஷ்ணசாமி இவரைப் பற்றி இங்கே சில சொல்லுதல் பொருந்தும். திருவாளர் ஈ.வெ. கிருஷ்ணசாமி சித்த மருத்துவர். தமது செலவில் இலவச மருத்துவம் செய்த நல்லவர்; வைதீக வைணவர். பின்னர் பெரியாரின் வழியில் - பகுத்தறிவுப் பாதையில் தொடர்ந்து நடை போட்டவர். பெரியாருடைய சமதர்மக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். 1933 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் பெரியாரும் அவரது தங்கை கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டார்கள். அரச வெறுப்பு பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். எதிர்பார்த்தபடி இருவருக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. பெரியாரின் பொறுப்பினை ஏற்றுப் புரட்சி என்னும் வாரஇதழுக்கு ஆசிரியராக ஈ.வெ.கி. செயல்பட்டார். 'பெரியார் பெற்ற தண்டனை பற்றிப் பொங்கும் தமிழர்கள், அவ்வுணர்ச்சிக்குச் செயல் உருவம் கொடுக்க வேண்டும். ஊர் தோறும் சமதர்மச் சங்கங்களை அமைப்பதின் வாயிலாக அடக்கு முறைக்குப் பதில் கொடுக்க வேண்டும் என்னும் கருத்துப்பட, தன் பெயரில், தலையங்கங்கள் தீட்டி வந்தார். இயக்கத் தொண்டர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தினார். பெரியார் சிறைப்பட்டிருந்தபோது சென்னையில், நாத்திக மாநாடு நடந்தது. தோழர் மா. சிங்காரவேலர் தலைமை ஏற்றார். காஞ்சிபுரம் நாத்திக குப்புசாமி என்பவர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். 31-12-1933 இல் நடந்த அந்த மாநாட்டில் ஈ.வெ.கி. கலந்து கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/637&oldid=787603" இலிருந்து மீள்விக்கப்பட்டது