பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 609 ஆய்வாளர் கேட்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் விளக்கம் கூற முன்வருவார்கள். என்ன விளக்கம்? தண்ணிர் குடிக்கப் போயிருக்கிறார்கள்; சிறுநீர் கழிக்கப் போய் இருக்கிறார்கள். இத்தகைய விளக்கங்கள், அடியோடு பொய் என்பதற்கில்லை. - பள்ளியில் குடிநீர் பெற ஏற்பாடு செய்த பள்ளியோ ஆயிரத்திற்கு ஒன்றாகவே இருந்தது. சிறுநீர் கழிக்க ஒதுங்கிடம் கிடையாது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்? இன்றைக்காவது எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் கழிவறைகள் உள்ளன என்று சொல்லமுடியுமா? முடியாது. பெண்கள் பள்ளிகளில்கூட இந்தக் குறை உண்டு! துப்புரவு பற்றியும் சுகாதாரம் பற்றியும் ஏட்டிலே படித்து நிறுத்திவிட்டால் நாடு நாறாமல் போகுமா? பல பெற்றோர்கள், பள்ளிக்கு வந்த பிள்ளைகளை மூடும் நேரம் வருவதற்கு முன்பே, வீட்டு வேலைக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். பள்ளிப் பருவத்தே, பச்சைக் குழந்தைகளை வேலை வாங்கிப் பாழாக்கினது, அக்காலத்தில் அதிகம். வருகைப் பதிவுக்கும் இருப்பதற்கும் உள்ள எண்ணிக்கை வேறுபாடு, ஆய்வாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே எரிச்சலை, பகையை வளர்க்கப் பெரிதும் பயன்பட்டது. நிலையைத் திருத்தச் சிறிதே பயன்பட்டது. ஏன்? பெற்றோர்க்குப் பொறுப்புணர்ச்சியை ஊட்டுவோர் இல்லை. பள்ளிகளில் வசதிகளைச் செய்து கொடுப்போர் இல்லை. உள்ளுர் ஆதிக்கவாதிகள் ஆசிரியர்களை மொட்டைக் கடிதங்கள் எழுதப் பயன்படுத்த முயல்வதுண்டு. ஆசிரியர்கள் அதற்கு இசையாவிட்டால் அவர்கள் பேரில் புகார் செல்லும். கொடுமையோ கொடுமை அன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கிள்ளுக்கீரைகள்: அல்லலுக்கு ஆளாகாமல் தப்புவதற்குக் கண்டவர்களின் காலில் விழ வேண்டும். ஆசிரியர்களின் ஊதியம் எப்படி? சொல்ல வெட்கக்கேடு. இக்கால ஊதியத்திற்கும் அக்கால சம்பளத்திற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒப்பானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/652&oldid=787621" இலிருந்து மீள்விக்கப்பட்டது