பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 615 புறப்பட்ட சில மணித்துளிகளில், மழை 'சோவென்று கொட்டியது. அக்கம்பக்கத்தில் தங்க இடம் இல்லை. எனவே, தொடர்ந்து முன்னேறினோம். குறுக்கிட்ட ஆரணி ஆற்றில் இறங்கி நடந்தோம். ஆற்றின் நடுவே மட்டும் வெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது. ஆழம் அதிகம் இராது என்ற நம்பிக்கையில் என் கையைப் பிடித்து நடத்திக் கொண்டு போனார். வெள்ளம் காலை வாருவதுபோல் விரைந்து ஒடிற்று. இருவரும் கைகோத்து நடந்ததால் சமாளித்தோம். மேலும் நான்கு அடிகள் கடந்து விட்டால், வெள்ளத்தைத் தாண்டிவிடுவோமென்ற மகிழ்ச்சியோடு, காலெடுத்து வைத்தேன். நொடிப்பொழுதில் கழுத்தளவு வெள்ளத்தில் தத்தளித்தேன். என் ஊழியர் வில்லி சட்டென்று கைகொடுத்தார். என்னைப் பள்ளத்தில் இருந்து தூக்கினார். மின்னலின் விரைவில் செயல்பட்டு என்னைக் காப்பாற்றினார். அதை உணர்வதற்குமுன், மணற்பரப்பில் காலெடுத்து வைத்தேன். ஆற்றில் வெள்ளம் பெருகக் கண்டேன். ஆனால் நான் எப்படியோ பிழைத்தேன். அப்பப்பா இப்போது நினைத்தாலும் எப்படியோ இருக்கிறது. தொல்லை அதோடு முடியவில்லை. மழை முற்றிற்று. எங்கும் காரிருள் சூழ்ந்தது. இடை இடையே மின்னல் கீற்றுகள் பளிச்சிட்டன; சான்றோர்கள் வழிகாட்டுவதைப் போன்று. மின்னலின் வெளிச்சத்தை நம்பி, வயல்களின்மேல் மெல்ல நடந்தோம். குடை பிடித்து இருந்தும் முழுக்க நனைந்து விட்டேன். இளமைப் பருவம் தாங்கிற்று. அடிமேல் அடியெடுத்து வைத்து நகர்ந்த நாங்கள் நெடுநேரத்திற்குப் பின் ஏரிக்கரையொன்றை அடைந்தோம். அச்சமூட்டும் சூழ்நிலை. கால் பாவமுடியாத சறுக்கல் நிலம்: ஒரு பக்கம் கரிய பனைமரங்கள்: அவற்றிற்கு இடையே முட்புதர்கள். அங்கங்கே பாம்புப் புற்றுகள். மறுபக்கம் வீழ்ந்தால் ஏரி நீரில் விழவேண்டும். இருட்டில் பரந்து கிடந்த ஏரி, கடல்போல் தோன்றிற்று. ஊழியர் இதோ சிறிது தூரமே பல்லைக் கடித்துக்கொண்டு வாருங்கள் என்று தெம்பூட்டிக் கொண்டே வந்தார். நீண்ட ஏரிக்கரையின் சகதியில் எப்படியோ நடந்து கீழே இறங்கினோம். ஒரளவு நம்பிக்கை பிறந்தது. மேலும் வரப்புகளின் மேல் நடந்து காட்டுரை அடைந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/658&oldid=787627" இலிருந்து மீள்விக்கப்பட்டது