பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 நினைவு அலைகள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்து வைத்திருந்த தணிக்கை அறிக்கைகளை வாங்கினேன். ஒன்றா? இரண்டா? இருபது அறிக்கைகள். இரவோடு இரவாக உட்கார்ந்து படி எடுத்துவிட முடிவு செய்தேன். கண்ணாடி விளக்கு நிறைய மண்ணெண்ணெய் ஊற்றச் சொன்னேன். உணவு ஆறிப்போகிறது என்று நினைவுபடுத்தவும் உண்பதற்கு முன்னுரிமை கொடுத்தேன். இரவு உணவை விரைந்து முடித்தேன். தணிக்கை அறிக்கை களைப்படி எடுப்பதற்கான வெற்றுப் படிகளைக் கொடுக்கும்படி கேட்டேன். அலுவலக உதவியாளர், போதுமான படிகளைக் கொடுத்தார். அவ்வேளை? 'அய்யா பகலெல்லாம் அலைந்திருக்கிறீர்கள். கூட்டுச்சாலையில் இருந்து நடந்து வந்திருக்கிறீர்கள். இப்போதே மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. நீங்கள், நாளை இரவே இரயில் ஏறித் தஞ்சாவூர்போக வேண்டும். 'பொழுது விடியவிடிய படி எடுத்தாலும் இருபதையும் முடிக்க முடியாது. நான் ஒன்று சொல்லலாமா? அடுத்த சில நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை. அப்போது நான் அலுவலகத்திலேயே இருப்பேன். அடுத்த அய்ந்தாறு நாள்களில் இவற்றிற்கெல்லாம் நானே படி எடுத்து விடுகிறேன். உரிய நேரத்தில், மேலிடத்திற்கு அனுப்பி விடுகிறேன். நீங்கள் கவலைப்படாமல் படுத்து உறங்குங்கள். விடியற்காலை எழுந்து இரயில் பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்' என்று அமிர்தலிங்க தேசிகர் மிகுந்த பரிவுடன் கூறினார். நம்ப வேண்டிய நெருக்கடியில் நான் இருந்தேன். அப்போது, அலுவலக உதவியாளர், ஒத்து ஊதினார். தேசிகருக்குத் தானும் உதவி செய்வதாக உதவியாளர் கூறினார். நன்றாகப் பழகுவதாலேயே, வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பினேன். ஏமாந்தேன். படியெடுக்க உட்காராமல் உறங்கிவிட்டேன். விடியற்காலை நான்கு மணிக்கு என் கடைநிலை ஊழியர் என்னை எழுப்பினார். விழித்ததும், ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தபடி, புகைவண்டி நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். பயணச்சீட்டு வாங்கி வந்தார்; வண்டி ஏற்றினார். ஆற்று வெள்ளத்தில் அடித்துப் போகாதபடி என்னைக் காத்த ஊழியரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டேன். அவரைக் கடைசி முறையாகக் காண்கிறேன் என்று அப்போது உணரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/673&oldid=787644" இலிருந்து மீள்விக்கப்பட்டது