பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 637 வழி பிறந்தது இரண்டு நாள் ஏக்கத்திற்குப் பிறகு, வழி மின்னிற்று. அதைப் பின்பற்ற முடிவு செய்தேன். அதைப் பற்றி எவரோடும் கலந்து ஆலோசிக்க வில்லை; எவர் இடமும் மூச்சு விடவில்லை. ஒரு நாள் காலை, என் ஊழியர் ரங்கராசுவை அதிகாலையில் வரும்படி கட்டளையிட்டேன். அப்படி வந்ததும் ஒரு சூடுக்குடுவை (பிளாஸ்க்) நிறையக் காப்பியை வாங்கிவரச் சொன்னேன். வாங்கி வந்ததும், என்னோடு வரும்படி கூறிவிட்டு, தஞ்சைப் புகைவண்டி நிலையத்திற்குச் சென்றேன். திருச்சிக்குச் செல்லும் பயணிகள் வண்டி காத்திருந்தது. ஆலக்குடிக்கு இரு பயணச்சீட்டுகள் வாங்கிவரச் சொன்னேன். அவற்றைப் பெற்றுக்கொண்டு, அந்த ரயிலில் பயணமானோம். ஆலக்குடியில் இறங்கியதும், கல்விராயன்பட்டிக்கு அழைத்துப் போகச் சொன்னேன். ரங்கராசு வழிகாட்ட அங்குப் போய்ச் சேர்ந்தேன். கல்விராயன்பட்டி நலப் பள்ளியை நெருங்கும் வேளை, பள்ளி திறந்திருக்கக் கண்டேன். விரைந்து பள்ளிக்குள் நுழைந்தேன். அங்குப் பிள்ளைகள் பத்துப் பேர்கள்கூட இல்லை. 'பில்லை போட்ட என் ஊழியரைக் கண்டதும் ஆசிரியர் என்னைக் கல்வித்துறை ஆய்வாளர்களில் ஒருவர் என்று அடையாளங்கண்டு கொண்டார். நாற்காலியைவிட்டு எழுந்திருந்து வணங்கி, விலகி நின்றார். நான் நாற்காலியில் அமர்ந்தேன். அப்பொழுது நான் கல்வித்துறை இளந்துணை ஆய்வாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். பிறகு, ஆசிரியரைப் பார்த்து, 'உம்மிடம் குவளை யிருக்கிறதா?' என்றேன். 'எசமான் கண்ணாடிக் குவளை இருக்கிறது' என்றார். 'அதை எடுத்துப் போய் கழுவிக் கொண்டு வாரும்' என்றேன். ஆசிரியர் பதைத்துப் போனார். 'எசமான் நான் ஆதிதிராவிடக் கிறுத்தவன். என் குவளையை எசமானிடம் கொடுக்கலாமா?' என்று நடுங்கினார். 'சொல்லுகிறபடி செய்யும்' என்றேன். மரப்பெட்டிக்குள் வைத்திருந்த கண்ணாடிக் குவளையை எடுத்தார். அருகில் இருந்த வாய்க்காலில் ஒடிக்கொண்டிருந்த நீரில் கழுவிச் கொண்டுவந்தார். என் கட்டளைப்படி குவளையை மேசைமேல் வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/680&oldid=787653" இலிருந்து மீள்விக்கப்பட்டது