பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 639 இப்படியொரு நம்பிக்கையா என்று நகைக்காதீர்கள். சாதி ஏற்றத்தாழ்வு, அதன் அடிப்படையில் தீண்டாமை, நெருங்காமை, ஒருவர் தொட்டதை இன்னொருவர் தொடாமை, ஒன்றாயிருந்து உண்ணாமை போன்ற வேதனையான நடைமுறைகள் ஈராயிரத்து அய்ந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய மக்களை மிதித்து நசுக்கி வருகின்றன. ஆதிதிராவிடர்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருப்பது மட்டுமா அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை? அவர்கள், வேட்டியை முழங்காலுக்குக் கீழே தொங்கும்படி கட்டிக்கொண்டு நடமாடக் கூடாது. ஆதிதிராவிடப் பெண்கள் இரவிக்கை அணியக்கூடாது. எவ்வளவு கரடுமுரடான வழியில் நடந்தாலும் எவ்வளவு சுடுமணலில் நடந்தாலும் செருப்பு போட்டுக் கொண்டு நடக்கக்கூடாது. ஈர் உருளியில் போகக்கூடாது. ஊரில், பெரிய சாதிகள் வாழும் தெருக்களின் வழியே சொல்லக்கூடாது. சாதி இந்துப் பிள்ளைகள் படிக்கும் பொதுப் பள்ளிகளில் மற்றவர்களோடு கலந்து உட்காரக் கூடாது. வெறும் பிறவி பற்றி இத்தனை கட்டு திட்டங்கள்; இழிவுகள். தெரிந்தோ தெரியாமலோ, ஆதிதிராவிடர் ஒருவர் மேற்கூறிய கட்டுப்பாடுகளில் ஒன்றை மீறிவிட்டால் என்னவாகும்? அவரை இழுத்து வந்து மரத்தில் கட்டிவிடுவார்கள். பலவேளை, ஆதிதிராவிடர்களே, ஆண்டையின்ஆனைக்கு அஞ்சி, தங்களில் ஒருவரை இப்படி மரத்தில் கட்டிப்போடுவார்கள். அப்புறம்? கட்டப்பட்டவரை புளிய மிளாரால் அடிப்பார்கள்; குருதிகொட்டக் கொட்ட அடிப்பார்கள்; கதறக்கதற அடிப்பார்கள். சில வேளை பண்ணையார்களின் - மேல்சாதிக்காரர்களின் வெறியுணர்ச்சி அப்போதும் குறையாது. மரத்தில் கட்டப்பட்டவரின் மனைவியை இழுத்துவரச் செய்வார்கள். அவள் கையில் செருப்பைக் கொடுப்பார்கள். அதனால், கட்டப்பட்டிருக்கும் கணவனை அடிக்கச் செய்வார்கள். அடையாளச் செருப்படியா? இல்லை. வலிவாகவே அடிக்க வேண்டும். ஆண்டை அல்லது கங்காணி எத்தனை முறை சொன்னாலும் அத்தனை முறை மனைவி தன் அருமைக் கணவனை அடித்தாக வேண்டும். இல்லாவிட்டால்? அவளுக்கு இவ்வளவு தண்டனை கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/682&oldid=787656" இலிருந்து மீள்விக்கப்பட்டது