பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. ஆதிதிராவிடப் பள்ளியில் ஆண்டுவிழா ஆரம்ப ஆசிரியர் முத்துசவரி நான், தஞ்சையில் தனியாக வாழ்ந்து இருந்த காலம்; ஒர் இரவு உணவுச் சாலையில் உணவு அருந்திவிட்டு, வெளியேறும் வேளை, தெருவோரம் நின்றுகொண்டிருந்த ஒருவர். 'கும்பிடுகிறேன் எசமான் என்று தலைதாழ்த்தி வணங்கினார். நான் நடந்தபடியே கையெடுத்து வணங்கினேன், அவரைப் பார்த்து 'நீர் யார்?' என்று வினவினேன். "எசமான், நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்' என்று விடையளித்தார். சரி, என்னோடு வாரும். அறைக்குச் சென்ற பின் பேசிக்கொள்ளலாம் என்று ஆணையிட்ட,பின், நிக்கல்சன் வங்கியின் மாடிக்குச் சென்றேன். உடன் வந்த ஆசிரியர், மாடிப்படியண்டை வந்ததும், 'அய்யா நான் ஆதிதிராவிடக் கிறுத்தவன்; அய்யா அறைக்குள் வருவது சரியாக இராது. இங்கிருந்தபடியே எசமானிடம் ஒரு சொல் சொல்லிவிட்டுப் போகட்டுங்களா?' என்றார். வழியில் நின்று பேச முடியாது. மேலே போன பிறகுதான் பேசுவேன். நீர் என் பின்னால் வாரும் ' என்று சொல்லிவிட்டுப் படியேறினேன். என் அறையைத் திறந்து மின்விளக்கைப் போட்டேன். அப்போதும் ஆசிரியர் அறைக்குள் வரத் தயக்கங்காட்டினார். நான், கண்டிப்பாகக் கூறியபின், அவர் உள்ளே நுழைந்தார். பிறகு, நீர் எந்தப் பள்ளியில் வேலை செய்கிறீர்? எதற்காக என்னைத் தேடி வந்தீர்?' என்று கேட்டேன். 'நான் ஆதிதிராவிட நலப்பள்ளி ஒன்றில் தொடக்கநிலை தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறேன். பெயர் முத்துசவரி.' - புதிய எசமான் வந்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். தாங்கள், பெரியார் வழியைப் பின்பற்றுபவர் என்றும் சொன்னார்கள். "தாழ்த்தப்பட்ட எங்களுக்குப் பெரியாரே காவல்: கண்கண்ட தெய்வம். 'அந்த வழியில் செயல்படும் புதிய ஆய்வாளர் அய்யாவைக் கண்டுவிட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான்' என்று விளக்கம் சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/687&oldid=787666" இலிருந்து மீள்விக்கப்பட்டது