பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 நினைவு அலைகள் விரைந்தோடும் அந்த நீரில் இறங்கி நடக்கத் திறமை வேண்டும். ஆய்வாளர்கள் அவற்றிற்கு அஞ்சி, நிர்வாகிக்கே முன்னதாகத் தகவல் கொடுத்துவிட்டுத் தான் போவார்கள். முன் அறிவிப்பின்றிப் பார்வையிட வேண்டுமென்பது, ஏட்டோடு நிற்கும். அப்படித் தகவல் கொடுத்தால், நிர்வாகி குறிப்பிட்ட நேரம், தக்க ஆள்களோடு, வாய்க்கால் கரையில் நிற்பார். ஆய்வாளரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு போவார். பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைப்பார். சுருக்கமாச் சொல்லுவது என்றால் நிர்வாகியின் தயவு இல்லாமல் ஆய்வாளர் எவரும் அப்பள்ளியைப் பார்த்துவிட்டு, திரும்பி வரமுடியாது. ஆதிதிராவிடக் குடிஇருப்பிற்குள் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கருதிய ஆய்வாளர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். அப்படிப்பட்டவர் தணிக்கையின் கீழ் பள்ளி வந்துவிட்டால் நிர்வாகிக்கும் ஆசிரியருக்கும் கொண்டாட்டம். சில பையன்களையும் இரண்டொரு பெண்களையும் குடியிருப் பிற்கு வெளியே கொண்டுவந்து காட்டி, தணிக்கைக் குறிப்புகளைப் பதிந்து கொண்டு போய்விடுவார்கள். பொய்மை இரு சாராருக்கும் வசதி. இப்படிப்பட்ட மான்யப் பள்ளியை நேரில், திடீரெனப் பார்த்துவிட முயன்றேன். என் ஊழியரை அழைத்துக் கொண்டு இரயில் ஏறினேன். இறங்க வேண்டிய புகைவண்டி நிலையத்தில் இறங்கினோம். அதற்கு நானா பக்கங்களிலும் பல பள்ளிகள் இருந்தன. அவற்றில் எதைப் பார்க்கப் போகிறோமென்று ஊழியருக்குக் குறிப்புக் காட்டவில்லை. வாய்க்காலில் இறங்கினேன் வண்டியில் இருந்து இறங்கியதும் பார்வையிட வேண்டிய பள்ளியின் பெயரைத் தெரிவித்தேன். 'எசமான் அந்த வழி பொல்லாத வழிங்க. பள்ளிக்கு நூறு கஜத்தில் ஆழமான வாய்க்கால் ஓடுதுங்க. நாம் தனியே கடக்க முடியாது. 'கரையில் நின்று குரல் கொடுத்தால், பள்ளி ஆசிரியர், நீந்தத் தெரிந்த இருவரை அழைத்து வந்து, நம்மைக் கூட்டிக் கொண்டு போவார். அப்படிப் போய்ச் சேருவதற்குள், போதிய பள்ளிப் பிள்ளைகளும் சேர ஏற்பாடு செய்துவிடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/695&oldid=787680" இலிருந்து மீள்விக்கப்பட்டது