பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகுதி. அங்குப் பணியாற்றியபோது பணிவையும் பண்புடைமையையும் வளர்த்துக் கொண்டார். 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்பதை அங்கே பாடமாகக் கற்றார். 'அடங்கத் தெரிந்தவனுக்குத்தான் அடக்கத் தெரியும்' என்னும் விவேகானந்தரின் கொள்கையைப் பயின்றார். பின்னர் அரசுப் பணியைத் தேடிப் பெற்று, பஞ்சாயத்து அலுவலராகப் பணியாற்றினார். அப்போது தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மக்கள் நிலையைக் கண்டார். 'நம் இனத்தை உயர்த்த வேண்டும் ' என்கிற எண்ணத்தை அவரது ஆழ்மனத்தில் அழுந்தப் பதித்துக்கொள்ள இப்பணி உதவியது. பின்னர் பள்ளி இளந்துணை ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் இளந்தலைமுறையினர் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தையும், ஊர்தோறும் பள்ளிகள் தேவை என்பதையும் உணர்ந்தார். இப்பணியில் இவர் பெற்ற பயிற்சியும் அனுபவமும் பிற்காலத்தில், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இவர் கல்வி உலகில் சாதனை படைக்கத் துணைபுரிந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக மாறுபாடுகளை எல்லாம் தம் வாழ்வோடு இணைத்து இந்த நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்த நூல் எதிர்காலத்தில், தமிழ்கத்திலுள்ள மக்களுக்கு மட்டு மன்று, இந்திய நாட்டிலுள்ள இளந்தலைமுறையினருக்கு, ஏன் - உலக மக்களுக்கே சிறந்த வழிகாட்டல் நூலாக அமையும் தன்மை உடையது. இளைய சமுதாயத்தினர், குறிப்பாக ஆசிரிய சமுதாயத்தினர் இதனை ஒரே ஒருமுறை படித்தால், அவர்கள் கல்வித் துறையில் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைத் தெளிவு புலப்படும்.

இவ்வகை எண்ணங்களால் தூண்டப் பெற்றமையால், நான் அவரோடு பழகிய நாள்களையும், கல்வித் துறையில் மட்டுமல்லாது கலை, கலாச்சாரத் துறைகளிலும் அவர் ஆற்றிய பணிகளையும் நினைவில் கொண்டு இந்நூலை மறுபதிப்பாகக் கொண்டுவர முனைந்தேன். எதிர்ப்பட்ட சிரமங்களுக்கு இடையே வெற்றி பெற்றேன்.

இந்நூல் சிறப்பாக வெளிவருவதற்கு உதவும் வகையில் மெய்ப்பு பார்த்து உதவிய பேராசிரியர் வி. கணபதி அவர்களுக்கும் சென்னை கிறித்துவக் கல்லூரி மேனிலைப்பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற துணைத் தலைமை ஆசிரியர் பூ. ஜெயராமன் அவர்களுக்கும் இந்நூலை வெளியிடுவதற்குப் பெரிதும் துணை நின்ற நெ.து. சு. அவர்களின் குடும்பத்தினராகிய திரு. லெனின் துரைசாமி முதலானவர்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலைத் தொடர்ந்து அடுத்து வெளிவர இருக்கும் இரு பகுதிகளுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் வரவேற்பளிக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.

ஆர். ராஜமோகன்
சாந்தா பதிப்பகம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/7&oldid=1204957" இலிருந்து மீள்விக்கப்பட்டது