பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

էյէյ Է: நினைவு அலைகள் எனவே, மாமனாரிடமிருந்து கடிதம் வந்தது. பெரியாருக்கு எங்கள் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யவும், அவருக்குப் பிடித்தமான உணவை ஆயத்தஞ் செய்யவும் எழுதியிருந்தார். பூவாளுர் பொன்னம்பலனாரிடமிருந்து மற்றோர் கடிதம் வந்தது. 'பெரியார், கூட்டத்தன்று மாலைதான் தஞ்சைக்கு வந்து சேருவார். நேரே கூட்டத்திற்குச் செல்வார். கூட்டம் முடிந்ததும் உங்கள் வீட்டிற்கு வருவார். இரவு சாப்பாடும் உங்கள் வீட்டில்தான். 'அவரோடு மூன்று நான்கு பேர்கள் வரலாம். அனைவரும் அன்றிரவு உங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார்கள். இரவு உங்கள் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் காலை புறப்படுவார்கள்.' இத்தகவல்கள் கிடைத்தன. அதற்கு ஏற்றபடி, உணவு ஆயத்தமாயிற்று. பெரியாரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டுமே. அதன் பொருட்டு, பொதுக்கூட்டத்திற்குச் சென்றேன். கூட்டத்திற்குள் செல்லாமல் எட்டி ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட மாயூரம் எஸ்.வி. லிங்கம் என்னிடம் வந்தார். ஏமாற்றம் ஊட்டும் ஒரு செய்தியைக் கூறினார். 'அய்யாவிற்கு இரண்டு நாள்களாகக் காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் இருக்கிறது. அய்யாவுக்கு மருந்து கொடுத்த மருத்துவர், அவரை வெளியூர் செல்லக் கூடாதென்று தடை விதித்தார். 'மருத்துவருக்குப் பக்குவமாகச் சொல்லிவிட்டு, அய்யா பொதுக் கூட்டத்திற்கு வந்துள்ளார். இப்போதும் காய்ச்சல் 102க்கு மேல் இருக்கிறது. 'அய்யா, அர்ரூட் கஞ்சி மட்டுமே சாப்பிடலாம். அதற்கு ஏற்பாடு செய்து விடுங்கள்' என்றார். என் இல்லத்தில் பெரியார் உடனே வீட்டிற்குச் சென்றேன்; கஞ்சி போட ஏற்பாடு செய்தேன். பொதுக்கூட்டம் முடிந்ததும் பெரியார், பொன்னம்பலனார், லிங்கம், உள்ளுர் நண்பர்கள் இருவர் ஆகியவர்களுடன் என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். வந்தவர்களுக்கு இலை போட்டுக் கொண்டு இருக்கையில், நான் பெரியாரோடு உரையாடினேன். அப்போது, 'அய்யா தாங்கள் இரண்டு நாள்களாகக் காய்ச்சலாக இருப்பதை இப்போதுதான் கேள்விப்பட்டேன். 'தாங்கள் எங்கள் வீட்டில் விருந்து உண்ண வேண்டுமென்பதில் ஆர்வந்தான். அதைவிடத் தாங்கள் உடல்நலத்தோடு இருக்க வேண்டும் என்பது அவசியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/709&oldid=787706" இலிருந்து மீள்விக்கப்பட்டது