பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{575 நினைவு அலைகள் எடுத்துக்காட்டாக, என் ஊராகிய நெய் யாடு பாக்கத்தைப் பார்ப்போம். நாற்பது அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எல்லோருடைய வீட்டுப் புறக்கடையிலும் வாழை இருக்கும்: இலையும் காயும் பழமும் விலை போட்டு வாங்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். எங்கள் ஊரிலிருந்து சந்தைக்கோ, அடுத்த ஊர் கடைக்கோ போவது மண்ணெண்ணெய், வெள்ளைச் சர்க்கரை, உருளைக் கிழங்கு. உப்பு ஆகியவைகளை மட்டும் வாங்கவே. நாற்பது அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்தத்தில் பெரும்பாலான தமிழ்நாட்டு ஊர்களின் நிலை, தன்நிறைவே. தனி ஆள் தன் நிறைவு அல்ல; ஊர்த் தன்னிறைவு. விலை ஏற்றம் இன்றோ அது தலைகீழாக மாறிவிட்டது; நாள்தோறும் உண்ணும் பொருள்களைக் கொண்டுவர, அக்கால நாட்டுப்புற மக்கள், இக்கால நாட்டுப்புற மக்கள் கொடுக்கும் அளவு சத்தம் கொடுக்கவில்லை. இன்றைய காய்கறிகளின் விலையின் பாதிக்குமேல் கொண்டுவர ஆகும் கூலியே. நகர்ப்புறங்களிலும், தாமே தம் வீட்டு பங்களாத் தோட்டங்களில் காய்கறிகளைப் பயிரிட்டுக் கொண்டவர்கள், முன்பு அதிகம்; இப்போது குறைவு; இன்னும் சில ஆண்டுகளில், அரியராவர் என்று அஞ்சுகிறேன். நம் மக்கள் போக்கை மாற்றாவிட்டால் விலையேற்ற வெள்ளம் நாட்டை மூழ்கடித்துவிடும். அதைப் பொதுமக்கள் எப்படித் தடுக்கலாம்? பழைய படி, வீடு தோறும் குடிசைதோறும் காய்கள் விளைய வேண்டும். -- அதற்கு அரசு திட்டம் தீட்ட முயன்றால், ஒரு ரூபாய் மதிப்புள்ள காய்களைப் பயிரிட நூறு ரூபாய், கண்ணில் படாமல், செலவாகிவிடும். பத்தாயிரம் செலவாகும் சிறிய திட்டத்தைத் தீட்டினாலும், எத்தனை எழுத்தர்கள், நடுநிலை - உயர்நிலை அலுவலர்கள் கொக்கி போடவேண்டும் தெரியுமா? -- பத்துப்பேர் கொக்கி போட்டதோடு முடியாது. உலகில் இருந்து விலகி மக்கள் நாடியையே தொட்டறியாத, கற்பனையில் சிந்திக்கும் தில்லி திட்டக்குழுவினர், அதைத் தட்டிப் பார்த்து, ஒப்புதல் கொடுப்பதற்கு முன், ஒரு டன் காகிதமாகிலும் செலவாகும்; நூறு பேர்களுடைய நேரமும் எழுத்தும் செலவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/717&oldid=787715" இலிருந்து மீள்விக்கப்பட்டது