பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103. காந்தம்மாவுக்கு வேலை கிடைத்தது மாவட்டக் கல்வி அலுவலர் அவமதித்தார் இருவேறு உலகத்தின் இயற்கை, ஒளியும் இருளுமாக மாற்றி மாற்றி வைப்பதுதான் ஒளி பொழியும் பகலே நீடிக்காது. அதை அடுத்து இரவு வரும்; காரிருள் சூழும் இரவு வரும். அதுவும் நிலைத்து நிற்காது விலகியே தீரும். பெரியார் ஈ.வெ.ராமசாமி எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியது, பெறற்கரிய பேறு. அப்பெருமையினை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். அம்மகிழ்ச்சி சில நாள்களில் அறுபட்டது. ஏன்? அப்போது, தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலராக இருந்தவர் திரு அப்பர் சுந்தரம் என்பவர். ஒரு விடுமுறை நாளன்று அவரிடமிருந்து ஒராள் வந்தார். அந்தப் பணியாளர் என்ன செய்தி கொண்டு வந்தார்? நான் அன்று மாலை, தவறாமல் மாவட்டக் கல்வி அலுவலரை அவரது பங்களாவில் காணவேண்டும் என்பது. இது வாய்வழி ஆணைதான். இருந்தாலும் நான் அதை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? தொலைவில் உள்ள பங்களாவில் குடியிருந்த அவரைக் காணச் சென்றேன். அவர் பங்களா இருந்த இடம் நடக்கும் தூரமல்ல. அன்று பேருந்து வசதியில்லை. எனவே, மாட்டு வண்டியில் பயணம் செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு அங்குப் போய்ச் சேர்ந்தேன். பங்களாக் கதவு மூடி பூட்டப்பட்டு இருந்தது. என்னை அழைத்த கல்வி அலுவலர் பங்களாவின் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார். அவரோடு எவரோ பேசிக் கொண்டிருந்தார். பங்களா நுழைவாயிலில் வண்டியைக் கண்டதும், அவர் பணியாள் ஒருவரை வரவழைத்து, வாயிலுக்கு அனுப்பி வைத்தார். கதவைத் திறந்துவிட வருகிறார் என்று எண்ணினேன். அப்படி நடக்கவில்லை. * 'அய்யா இப்போது எவரையும் பார்க்க இயலாது' என்று பணியாள் கண்டிப்பாகக் கூறினார். நான் யார் என்று அறிவித்துவிட்டு, நான் பார்வையாளனாக வரவில்லை. அய்யாவின் ஆணைப்படியே வந்துள்ளேன். இந்நேரம் வரும்படி அய்யாவே சொல்லி அனுப்பினார். இதை அய்யாவிடம் நினைவுபடுத்தும்' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/720&oldid=787719" இலிருந்து மீள்விக்கப்பட்டது