பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 நினைவு அலைகள் நாமோ, விழுங்கு உணவை விழுங்குதற்கும் உணர்ச்சியற்றுக் கிடந்தோம். காந்தியடிகள் விரும்பிய வாய்மையை, தூய்மையை, தீண்டாமை ஒழிப்பை, தன்னிறைவை, பேச்சளவோடு நிறுத்திக் கொண்டதைப் போன்று, முதியோர் எழுத்தறிவையும் வெட்டிப்பேச்சுக்கு மட்டுமே பயன்படுத்தினோம். அதைச் செயல்படுத்தப் போதிய நாட்டம் செலுத்தவில்லை. தற்குறித் தன்மை மேலும் மேலும் தொடர்ந்தது. வேறு பக்கம் பார்ப்போம். தன்மான இயக்கம் எழுத்தறியாமை இழிவைப் பற்றியும் சிந்தித்தது. பல மாநாடுகளில், முதியோர் எழுத்தறிவுக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, முடிவு எடுத்தது. முன்னர் காணாத ஆர்வமே, எழுச்சியே உடலாக, உயிராக, உள்ளுணர்வாக விளங்கிய அன்றையத் தன்மான இயக்கம் எத்தனைதான் செய்யமுடியும்? பொறுப்பான இந்தப் பணியினுக்குக் கவர்ச்சியிராது; இதில் காரம் சேராது. இருக்கிற இடம் தெரியாது, அமைதியாக, இந்த அடிப்படைப் பணியினைப் பல ஊர்களில் தொடங்க, விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்திச் செல்லக் கூடியவர்கள், புரட்சி இயக்கத்தில் அரிதாக இருப்பது இயற்கை. இந்த இயற்கையால் தன்மான இயக்கம் எழுத்தறிவுப் பணியில் இறங்காமலே போய்விட்டது. தற்குறித் தன்மை தொலையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின்னரும் அது தொலையவில்லை. சென்னை மாகாணத்தில் முதியோர் கல்வி அன்னிய ஆட்சியின் மாலைப்பொழுதில் சென்னை மாகாணத்தில் முதியோர் கல்வித் துறையில் தொடங்கிய ஒரு பெரும் வெள்ளோட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வது பொருத்தம். சென்னை மாகாண முதலமைச்சராக ஓமந்துார் இராமசாமியாரும், கல்வி அமைச்சராக, கோவை தி.சு. அவினாசிலிங்கனாரும் விளங்கியபோது, மாவட்டம் தோறும் பல இடங்களில் முதியோர் எழுத்தறிவு நிலையங்கள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. உயர் தொடக்கநிலைப் படிப்போடு நின்றவர்கள், தொடர்ந்து அறிவுபெறும் பொருட்டு, சில ஜனதா கல்லூரிகள் தொடங்கவும் ஆணை பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/735&oldid=787735" இலிருந்து மீள்விக்கப்பட்டது