பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 703 பசுவைப் போன்று நானும் அசைபோட்டேன். வரலாற்று உணவில் சில உருண்டைகளை அரைத்துக் கொடுத்தேன். அதனால், 'பகுத்துண்டு வாழும் முழு மனநிறைவு எனக்கு. அறிஞர்களை - நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் நிறைவான மகிழ்ச்சி, கற்போருக்கு. புது உணவு படைக்கட்டுமா? 'மூவாசைகளை விடு. இது ஆன்றோர் வாக்கு. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னைப் பற்ற வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஆனால், பேரவாக்களுக்கு ஆட்பட்டேன். 'நமக்குத் தொழில் கவிதை: நாட்டிற்கு உழைத்தல்: இமைப்பொழுதும் சோராதிருத்தல் இது பாரதியார் தமக்கு வகுத்துக் கொண்ட பெருவழி. பதினாறு; பதினேழு வயதில் இவ்வைர வரிகளைப் படித்தேன். பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் பதிந்துவிட்டன. உணர்வில் கலந்துவிட்டன. கவிதையாற்றல் என்னுள் முளைக்கவில்லை. எனவே, பிறஇரண்டும் முளைத்தன; தாராளமாகத் தழைத்தன. பெரிய பொறுப்புகளை எட்டிப்பிடிக்க வேண்டும்; அவற்றைக் கொண்டு இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும். மகாகவி பாரதி கட்டளையிட்டபடி வீடுதோறும் கலையின் விளக்கம் ஒளிர ஆவன செய்யவேண்டும். o 'என்னருமைத் தமிழ் நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்பதற்குப் பெருந்துணையாக நிற்கவேண்டும்.' 'பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவிகொள்ள ஊன்றுகோலாக நிற்கவேண்டும். இவ்வகையில் சமுதாய நலனுக்கான கருவியாக வாழவேண்டும் என்னும் அவா, என்னுள் நிறைந்தது. உயர்ந்த குறிக்கோள், சீரிய சிந்தனைகள், நல்ல கருத்துகள் முதலியன, எளியோர் வாயிலிருந்து வரும்போது, மக்களால் கொள்ளப்படுவ தில்லை. பெரும்நிலையில் இருப்போர் வாயில் இருந்து அவை வெளிப் படின், ஏற்றுக் கொள்ளப்படும்; ஒரளவாவது செயல்படுத்தப்படும். இது உலகத்து இயற்கை. இதை இளமையிலேயே புரிந்து கொண்டவன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/744&oldid=787745" இலிருந்து மீள்விக்கப்பட்டது