பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 709 காந்தியண்ணல் வாழ்நாளில் சபர்மதியும் சேவா கிராமமும் எப்படியோ - பெரியார் காலத்தில் ஈரோடும் திருச்சியும் எப்படியோ, அண்ணா காலத்தில் காஞ்சி எப்படியோ - அப்படிப்பட்டதோர் நிலையைக் கரந்தை பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. அக்காலகட்டத்தில அங்குத் தமிழ்க் கற்பித்தவர்கள் மெய்யான ஆசிரியர்கள்; பாடம் சொல்லுவதை வெறும் பிழைப்பாகக் கொள்ளாமல், உயிர்க்கு இனிய மொழித் தொண்டாகவும், நெஞ்சம் நிறைந்த சமுதாயத் தொண்டராகவும் கருதிச் செயல்பட்டார்கள். அவர்கள் குறியெல்லாம் தங்களுடைய ஆழ்ந்த, அகன்ற, நுண்ணிய, தமிழ் அறிவை வரும் தலைமுறைகளோடு பங்கிட்டுக் கொள்வதாக இருந்தது. ஊனைச் சுருக்கி, உள்ளொளி பெற முயல்வார்போல், பணத்தை மறந்து, தமிழ் ஒளியை வளர்ப்பதில் முனைப்பாக இருந்தார்கள், அத்தமிழ்ப் புலவர்கள். அத்தகைய கரந்தைத் தமிழ்க் கல்லூரியை, தமது வாழ்நாள் முழுவதும் உமாமகேசுவரனார், கண்ணினைக் காக்கும் இமையெனக் காத்து வந்தார். அத்தமிழ்வேளுக்குத் தமிழும் சைவமும் இரு கண்கள். இரண்டிலும் ஆழ்ந்து தோய்ந்த அறிஞர். அவருக்குப் பொதுவாழ்க்கை ஈடுபாடும் நிறைய இருந்தது. அவர் நீதிக்கட்சியைச் சார்ந்தவர். அப்பெரியவர், காசிப் பயணத்தை மேற்கொண்டார்; சில உற்ற நண்பர்களோடு சென்றார். அவர் மரபு வழி மாறாத இந்து என்பது இதனால் புலனாகிறது. அப்பெரியவர் வட இந்தியாவில் சில ஊர்களைப் பார்த்த பிறகு, காய்ச்சலில் படுத்தார்; படுத்தவர் குணமாகவில்லை. சென்ற நண்பர்களும் அவர் தங்கி இருந்த இல்லத்தவர்களும் பட்ட பாடு அனைத்தும் பாழாயின. திரு. உமாமகேசுவரம்பிள்ளை மறைந்தார். அவர் மறைவு பற்றி, கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் இரங்கம் கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். உரைகளைக் கேட்டு உருகினேன். உமாமகேசுவரம்பிள்ளை, சுயமரியாதை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். தந்தை பெரியாருக்கு வேண்டியவர். எனவே, நாத்திகர் என்று பொறுப்பற்றவர்களால் துற்றப்பட்டவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/750&oldid=787752" இலிருந்து மீள்விக்கப்பட்டது