பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 711 அப்படி மாறாது இந்துக்களாகப் பெயர் அளவில் இருப்பவர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் சின்னமாய் இராது, பிளவுபடுத்தும் ஆப்புகளாகத் தம்மை அறியாமலே செயல்பட்டுவிடும் கேடு நேர்ந்துவிடும். ஒரேசமயத்தைப் பின்பற்றுபவர்களை ஆயிரம் சாதிகளாகப் பிரித்து, அவர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து, அக்கற்பனையைப் போற்றிக் காப்பது, எப்படிச் சமயத்தின் சிறப்பாக முடியும்? மதுரை மண்டலப் பள்ளி ஆய்வாளர் எனக்கு அனுப்பிய, மாறுதல் ஆணையைப் பெற்றுக்கொண்டு, சென்னைக்கு வந்து சேர்ந்தேன். அப்போது, சென்னையில் இரு தொடக்கப் பள்ளி ஆய்வாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் தென் சென்னை ஆய்வாளர்; மற்றொருவர் வடசென்னை ஆயவாளா. அக்கால கட்டத்தில், பெண்களுக்கு என்று தொடக்கப்பள்ளிகளும் நடந்தன. அவற்றைக் கண்காணிக்க அம்மை யார் ஒருவர் ஆய்வாளராக இருந்தார். சென்னையில் பணி என் பதவி, தென்சென்னை ஆய்வாளர் அலுவலகத்தோடு இணைந்தது. ஆயினும் வடசென்னைப் பகுதியில் இருந்த பள்ளிகளும் என் கண்காணிப்பில் விடப்பட்டன. முந்திய வட்டார ஆய்வாளர் பெயர், கிருஷ்ணமூர்த்தி அய்யர். பிந்திய வட்டாரத்தில், சாம்பசிவம் பிள்ளை ஆய்வாளராக இருந்தார். இருவருமே என்பால் அன்பு காட்டினார்கள். இருவரிடமும் நான் பொறுப்போடும் ஒரே மாதிரியான மரியாதையோடும் நடந்து கொண்டேன். நான் சென்னைக்கு மாறுதலாகி வந்தபோது இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அய்ரோப்பாவில் இட்லர் மூட்டிய அப்போர், மேற்கே பரவி, சில நாடுகளை ஏப்பம் விட்டுக் கிழக்கேயும் முற்றும் நிலை உருவாகி விட்டது. அந்நிலையில் நான் சென்னைக்கு வந்தது நல்லதற்கு அல்ல, என்று என்னிடம் வாய்விட்டுக் கூறி, பச்சாதாபம் காட்டியவர்கள் பலர் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/752&oldid=787754" இலிருந்து மீள்விக்கப்பட்டது