பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 713 மக்கள் உள்ளங்களில் போர் வெறியை வளர்த்தார். ஆட்சியைக் கைப்பற்றி ஜெர்மானியருக்குப் போதுமான கடுமையான பயிற்சி கொடுத்தபிறகு, இரண்டாவது உலகப் போரில் குதித்தார். இட்லரும் தமக்குச் சில கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டார். இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், ஜப்பானியத் தலைவர் டோஜோவும் மண்ணாசை உந்தப், போர் வெறி கொண்டு இட்லரின் சதியில் சேர்ந்தார்கள். மூவரும் உலகம் முழுவதையும் வென்று, தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வது என்று ஒர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அவர்களுடைய உலகளாவிய போர்த்திட்டப்படி சர்வாதிகாரி இட்லர் போர்முரசு கொட்டினார். செக்கோஸ்லாவியாவைப் பிடித்தார். பெல்ஜியத்தைப் பிடித்தார்; பிரான்சைப் பணிய வைத்தார். பிரிட்டனைத் தாக்கினார்; நினைத்தபடி பிடிக்க முடியவில்லை. பிரிட்டானியர், இட்லருக்கு ஈடுகொடுத்துப் போராடினர். அப்பகுதியில் போர் நீண்டது. இட்லர் வேறு சில அய்ரோப்பிய நாடுகளைப் பிடித்துவிட்டு, சோவியத் நாட்டைத் திடீர் என்று தாக்கினார். முன் அறிவிப்பின்றித் தாக்கினார்; சோவியத் நாட்டோடு செய்து கொண்டிருந்த அமைதி உடன்படிக்கையை உதறிவிட்டுத் திடீரெனத் தாக்கினார். தனது படைகளில் சிறந்தவற்றைச் சோவியத் நாட்டைப் பிடிக்க அனுப்பினார். மிக அதிகப்படியான, பல்வகைப் படைகளையும் சோவியத் நாட்டின் மேல் முடுக்கிவிட்டார். ஆறு வாரங்களில் சோவியத் நாட்டைப் பிடித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தார். அது பலிக்கவில்லை. ஆயத்தமாயிராத போதிலும் சோவியத் மக்கள்துணிந்து நின்றார்கள்: கூடி எதிர் நின்று போராடினார்கள். நான்கு ஆண்டுகள் போராடினார்கள். ஈராயிரம் மைல் நீளக் களங்களில் போராடி வென்றார்கள். சோவியத் நாட்டை வென்றுவிடலாம் என்று கனாக்கண்ட இட்லர், பிறகு பெர்சியா வழியாக, இந்தியாவை நோக்கிப் பாய்வதற்காகத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்திருந்தார். இந்திய நாடு, ஆங்கில ஆட்சிப் பிடியில் இருந்து, ஜெர்மானியப் பிடிக்குள் வரும் என்று இட்லர் கனவு கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/754&oldid=787756" இலிருந்து மீள்விக்கப்பட்டது