பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 நினைவு அலைகள் அதுவே அன்றும் இன்றும் எனது வாழ்க்கையின் குறிக்கோள். எனினும், அன்றையச் சூழலில், இருக்கிற பிரிட்டானியப் பேரரசு அழிந்து, புதிய ஜெர்மானியப் பேரரசு உருவானால் அது, இரும்பு விலங்கைக் கழற்றிவிட்டு, எஃகு விலங்கை வாங்கி மாட்டிக் கொண்டதாகவே முடியும். இந்தியாவின் விடுதலை தள்ளிப் போகும் என்பது என் கருத்து. மக்கள் ஆட்சிக் கொள்கைக்காகப் போராடுவதாக, உதட்டள விலாவது சொல்லும் பிரிட்டானியர் கொடுக்க முன் வராத, ஆட்சி உரிமையை, - 'நாங்கள் மற்றவர்களை அடக்கி ஆளப் பிறந்துள்ளோம் என்று நினைக்கும், சொல்லும் ஜெர்மானிய இன வெறியர்கள், எளிதில் கொடுத்துவிடுவார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. இந்தியாவிற்குப் புதிய அயல்நாட்டு எசமானர்கள் வந்துவிடக் கூடாது என்பது என் விருப்பம். எனவே, நான் உளமாரப் போர் ஆதரவுப் பணியில் தீவிரமாக ஈடுபடும் நிலையில் இருந்தேன். அழைப்பினைத் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டேன். சில நாள்கள் சென்றன வேண்டிய முன்அறிவிப்புக் கொடுத்து விட்டு அன்பர்கள் வந்தார்கள். என்னைப் பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். சென்னையில் ஏழைகள் குடியிருக்கும் பல பகுதிகளில் நான் பேச நேர்ந்தது. அரசியல் பேச்சாளர்கள், காங்கிரசைத் தாக்குவார்கள். என் பேச்சில் எவரையும் தாக்க மாட்டேன். போர் பற்றி நான் புரிந்து கொண்டதை, மக்களுக்கு எடுத்துரைப்பதோடு நிறுத்திக் கொள்வேன். என் பேச்சை வரவேற்றனர் தொடக்கத்தில் என் பேச்சிற்கு வரவேற்பு அதிகம் இல்லை. மெல்ல மெல்ல, என் அணுகுமுறை பலருக்கும் பிடித்து விட்டது. அதனால், எனக்கு கிராக்கி அதிகம். என் நல்வாய்ப்பு அப்பெரியவர்கள் என்னிடம் அழுக்காறு கொள்ள வில்லை; என்னைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மாவட்டக் கல்வி அலுவலரின் எரிச்சல் இதற்கிடையில் படைநல நிதி திரட்டும் முயற்சியொன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/759&oldid=787761" இலிருந்து மீள்விக்கப்பட்டது